தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பூஜ்ஜியம் தான்… உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டும் பூஜ்ஜியம் தான் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தவெக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். இன்றைய கூட்டம் நிறைவடைந்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த அரசு அமைந்து கிட்டத்தட்ட நூறு நாட்கள் ஆகப் போகிறது. இந்த அரசின் செயல்பாடுகளை எடுத்துக் கொண்டால் அனைவரும் பூஜ்யம் என்று தான் கூறுவார்கள். இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டும் பூஜ்ஜியம் தான்.

திராவிட மாடல் ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோ அதற்கு மேல் இன்றைய ஆட்சியாளர்கள் ஒரு ஸ்டிக்கர் ஒட்டி கொண்டிருக்கிறார்கள்..
இவர்களின் ஆட்சியில் மாற்றம் என்னவென்றால் அனைத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டுவது தான். பெயர் மாற்றுவது தான் மாற்றம். தாய் மாமன் திட்டம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் தான் அளிக்கப்படும் என கூறுகிறார்கள். நாட்டிலேயே தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக இருக்கிறது என பெருமையாக கூறுகிறார்கள். அதற்கு திராவிட மாடல் ஆட்சியில் செய்த சாதனைகள் தான் காரணம் என்பதை நாங்கள் மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள். கல்வித்துறைக்கு முந்தைய ஆட்சியில் ரூ.48,500 கோடியை நாங்கள் ஒதுக்கீடு செய்திருந்தோம். ஆனால் தற்போது குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது குறித்து பேச ஆட்சியாளர்களுக்கு தைரியம் இல்லை. இந்த ஆட்சியில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினேன். அதற்காக நேற்று என்னை வீடு புகுந்து கைது செய்தார்கள். பட்ஜெட்டுக்கான டேக் டைவர்சன்n தான் இது. கடந்த 100 நாட்களாக சட்டம் ஒழுங்கு பிரச்னை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து வாரங்களில் 5 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

தவெக அரசு அமைந்த பிறகு தினந்தோறும் மின்தட்டுப்பாடு உள்ளது. மின் கட்டணமும் அதிகமாக வருகிறது, அமைச்சர்கள் பள்ளிகளுக்குள் சென்று கட்சியின் பெயரை கோஷம் போடச் சொல்லுகிறார்கள். அதனை ரீல்ஸ் எடுத்து வெளியிடுகிறார்கள். இந்தியாவே நீட்டுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. அதனை இந்த அரசு எதிர்க்க மறுக்கிறது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர், எதுவும் பேச மறுக்கிறார். அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் அளிக்கிறார்” என்று கூறினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *