
எந்தப் பாடலைக் கேட்டாலும் அந்தப் பாட்டோடு தொடர்புடைய பெரிய நடிகராக நம்மை உணர்வதாகத் தானே பெரும்பாலும் இருக்கும். ஆனால், ஒரே ஒரு பாட்டைக் கேட்கும் போது மட்டும் நான் என்னை நடிகர் எஸ்.வி.சுப்பையாவாக உணர்வேன். உண்மையில் அதுவரை அந்தப் பாட்டை நான் அத்தனை கவனமாகக் கேட்டது கூட இல்லை. முதன்முதலில் எங்கள் மகள் வர்ஷாவின் திருமணத்தின் போது தான் அந்த பாடலின் வரிகளை கவனித்துக் கேட்கும் சந்தர்ப்பம் அமைந்தது.
காசி யாத்திரை முடிந்து வர்ஷாவையும், மாப்பிள்ளையையும் ஊஞ்சலில் அமர வைத்து, கண்ணூஞ்சல் ஆடி மகிழ்ந்தால் பாடுகிறார்கள். மாப்பிள்ளையின் சித்தி பாட்டு டீச்சர். அவர்
வசந்தத்தில் ஓர் நாள்
மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ – தேவி
வைதேகி காத்திருந்தாளோ..
மையிட்ட கண்ணோடு மான் விளையாட
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ – தேவி
திருமால் பிரமு்மா சிவனும்மூவர்
காவலில் நின்றிருந்தாளோ…
என்று பாடுகிறார். சுசீலாம்மாவே வந்து பாடுவது போல் எனக்குப் புல்லரிக்கிறது. என் பக்கத்தில் கையில் நாதஸ்வரத்தோடு எம்.வி.சுவாமிநாதன் நிற்கிறார். இரண்டாவது நாதஸ்வரம் அவரது மருமகன் சங்கர். ஒரு தவில் சுவாமிநாதனின் தம்பி ராஜேந்திரன். இரண்டாவது தவில் சங்கரின் தம்பி முத்துமாணிக்கம். முத்துமாணிக்கம் மட்டும் சமக்கி பதித்த கருநீல ஷெர்வாணி, ஒற்றைக் காதில் தோடு, கழுத்து வரை புரளும் தலைமுடி, கைகளில் டாட்டூ என்று ஜென் Z கலைஞனாக இருக்கிறான்.
சுவாமிநாதன் தில்லானா மோகனாம்பாள் சிவாஜி போல் நான் வாங்கி வாசிக்கவா? என்று கண்களால் கேட்கிறார். நான் தலையசைக்கிறேன். சுவாமிநாதனும், சங்கரும் திரும்பவும் மையிட்ட கண்ணோடு மான் விளையாட என்று தர்பாரி கானடாவைப் பிழிகிறார்கள். பொதுவாக எந்தப் பாட்டைக் கேட்டாலும், சிவாஜியாக அல்லது எம்.ஜி.ஆராக என்னை நினைத்துக் கொள்ளும் நான் அன்று அந்த ஒரு பாட்டுக்கு மட்டும் என்னை எஸ்.வி.சுப்பையாவாக உணர்ந்து மனதுக்குள் தழுதழுத்தேன்.

சுவாமிநாதன் என்னைவிட ஐந்தாறு வயது மூத்தவராக இருப்பார். குடும்ப நண்பர். வர்ஷா சிறுமியாக இருந்த காலத்தில் தீபாவளியின் போதெல்லாம் அவரது குழுவினர் காலையில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்றும மங்கள இசை வாசித்து தட்சணை பெற்றுச் செல்வது வழக்கம். நான் மட்டும் கலைஞர்களை யாசகர்களாக நடத்தக் கூடாது என்று உள்ளே வரச்சொல்லி, ஜமுக்காளம் விரித்து, உட்கார்ந்து வாசிக்கச் சொல்வேன். “பாப்பாக்கு இப்ப என்ன கீர்த்தனம் வருது? “ என்பார். “ஆபோகி வர்ணம்“ என்றதும் “ரீ கா கரி ஸா ஸரிஸஸ தமதா“ என்று ஆபோகி வர்ணத்தை வாசிப்பார். “அவங்களுக்கு தெரிஞ்சத வாசிச்சா சந்தோஷப்படுவாங்க,“ என்பார். அன்று ஆரம்பித்த பழக்கம். இப்போது பெரிய வித்துவான் ஆகிவிட்டார். தம்பி, மருமகன்கள் என்று பெரிய குடும்ப இசைக்குழுவைவே உருவாக்கி விட்டார்.
ஆனி கடைசி முகூர்த்தத்தில் ஒரு உறவினர் வீட்டுத் திருமணம். மகள், பேரனோடு போயிந்தேன். அங்கும் நண்பர் சுவாமிநாதனின் நாதஸ்வரம் தான். பேரனுக்கு நாதஸ்வரம், தவிலைக் காட்ட அருகில் சென்றேன். பெரிய தொப்பை காரணமாக நர்த்தன விநாயகர் போல் ஒரு காலை சற்றே முன்பாக நீட்டி உட்கார்ந்திருந்த சுவாமிநாதன் நாதஸ்வரத்தை லேசாக உயர்த்தி, “வாங்க சாமி” என்று வணங்கினார்.
“நம்ம பேரனா?“ “ஆமா..“
“பாப்பா கல்யாணம், உங்க சஷ்டியப்த பூர்த்தி எல்லாம் நல்லபடியா வாசிச்சாச்சு. தம்பிக்கு காலாகாலத்துல பூணல் போடுங்க, வந்து வாசிச்சு ஆசீர்வாதம் பண்றோம்,“ என்றார்.
“கண்டிப்பா நீங்க தா வந்து வாசிக்கணும்,“ என்றேன்.
என் அண்ணன், அக்கா குடும்பம் அனைவரையும் விசாரித்தார். எல்லாம் கார்ப்பரேட் மயம், இவண்ட் மேனேஜ்மெண்ட் காரர்கள் ஏற்பாடு செய்வதுதான் நிகழ்ச்சிகள், சம்பிரதாயங்கள் என்றாகி விட்ட இந்த உலகமயக் காலத்தில் நாதஸ்வரக் கலைஞரும், கேட்டரிங் கலைஞரும், மாலை கட்டித் தருபவரும் குடும்ப நண்பர்களாக இருப்பதெல்லாம் இன்றும் மதுரையில் மட்டுமே சாத்தியமாக இருக்கிறது.
“என்ன பாட்டு வாசிக்க?“ என்றார். ஒரு கணம் வசந்தத்தில் ஓர் நாள் பாட்டைச் சொல்ல நினைத்தேன். ஆனால், அது என் வாழ்வின் ஒரு பொன்னான தருணத்திற்கு மட்டுமே உரியதான ஒரு விசேஷமான பாட்டு. வர்ஷா சந்திரகலாவாகவும், மாப்பிள்ளை சிவகுமாராகவும், அதைவிட முக்கியமாக நான் எஸ்.வி.சுப்பையாவாகவும் இருந்த ஒரு அபூர்வ கணத்தின் தேவகானம்.. அதை வேறொரு திருமண மேடையில் கேட்க எனக்கு மனம் வரவில்லை !
“கௌரி மனோகரில கண்ணா… வருவாயா… வாசிங்க“ என்றேன்.
“ஆஹா… நல்ல பாட்ட சொன்னீங்க….” என்று சுவாமிநாதன்
கண்ணா… வருவாயா…
மீரா கேட்கிறாள்
மன்னன்… வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்…
மாலை மலர் சோலை
நதியோரம் நடந்து…
கண்ணா… வருவாயா…
என்று நிறுத்த, சங்கா்
நீல வானும் நிலவும் நீரும்..
நீ யென காண்கிறேன்…
என்ற சேர்ந்து கொள்கிறான். முத்துமாணிக்கம் அனுசரணையாக தவிலோடு உருண்டு வருகிறான்.
நான் ஒவ்வொரு முறையும் நல்ல இசையைக் கேட்கும் போது, வானிலிருந்து பூமாரி பொழியும் தேவர்கள் இப்போதும் என் மீதும், பேரன் பாரதி மீதும் பூமாரி பொழிந்தார்கள்.
– ச.சுப்பாராவ் ( தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87 லிஙகை கிளிக் செய்யவும்.




மற்ற செய்திகளை விட இசை மற்றும் அதன் அனுபவம் தான் interesting ஆக இருக்கிறது. அதற்காக மற்ற செய்திகள் தேவையற்றவை என்பது அல்ல. ஒரு கூடுதலான ஈர்ப்பு தான்.
குறிப்பிட்ட சில கணங்களில் நாம் கேட்கின்ற சில பாடல்கள் நமது இதயத்துக்கு நெருக்கமாகி சொந்தமும் ஆகிவிடுகின்றன. அது உணர்வு சம்பந்தப்பட்டது. மீண்டும் அதே பாடல்கள் எங்கேயாவது பாடப்படும் போது அல்லது எங்கிருந்தோ காற்றில் வந்து காதில் விழும்போது ஒரு சினேகம் கலந்த புன்னகையுடன் அல்லது பல நேரங்களில் வார்த்தைகளில் சொல்ல முடியாத உணர்வுடன், பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியாத உணர்வுடன் ஒன்றி எத்தனை பெரும் கூட்டம் நம்மை சுற்றி இருந்தாலும் தனித்து நிற்கும் உணர்வைப் பெறுவோம். யாருடனும் வார்த்தைகளால் பகிர்ந்து கொள்ள முடியாத நிமிடங்களாக அவை ஓடும். திடீர் என காலைத் தழுவி இடுப்பு வரை நனைத்து மீண்டும் கைப்பிடிக்குள் அடங்காமல் கடலுக்குள் தொலை தூரம் சென்று விடும் அலைகளாக நமக்கான சில பாடல்கள்…
குறிப்பிட்ட சில கணங்களில் நாம் கேட்கின்ற சில பாடல்கள் நமது இதயத்துக்கு நெருக்கமாகி சொந்தமும் ஆகிவிடுகின்றன. அது உணர்வு சம்பந்தப்பட்டது. மீண்டும் அதே பாடல்கள் எங்கேயாவது பாடப்படும் போது அல்லது எங்கிருந்தோ காற்றில் வந்து காதில் விழும்போது ஒரு சினேகம் கலந்த புன்னகையுடன் அல்லது பல நேரங்களில் வார்த்தைகளில் சொல்ல முடியாத உணர்வுடன், பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியாத உணர்வுடன் ஒன்றி எத்தனை பெரும் கூட்டம் நம்மை சுற்றி இருந்தாலும் தனித்து நிற்கும் உணர்வைப் பெறுவோம். யாருடனும் வார்த்தைகளால் பகிர்ந்து கொள்ள முடியாத நிமிடங்களாக அவை ஓடும். திடீர் என காலைத் தழுவி இடுப்பு வரை நனைத்து மீண்டும் கைப்பிடிக்குள் அடங்காமல் கடலுக்குள் தொலை தூரம் சென்று விடும் அலைகளாக நமக்கான சில பாடல்கள்…
இக்பால்
வசந்தத்தில் ஓர் நாள்…
குறிப்பிட்ட சில கணங்களில் நாம் கேட்கின்ற சில பாடல்கள் நமது இதயத்துக்கு நெருக்கமாகி சொந்தமும் ஆகிவிடுகின்றன. அது உணர்வு சம்பந்தப்பட்டது. மீண்டும் அதே பாடல்கள் எங்கேயாவது பாடப்படும் போது அல்லது எங்கிருந்தோ காற்றில் வந்து காதில் விழும்போது ஒரு சினேகம் கலந்த புன்னகையுடன் அல்லது பல நேரங்களில் வார்த்தைகளில் சொல்ல முடியாத உணர்வுடன், பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியாத உணர்வுடன் ஒன்றி எத்தனை பெரும் கூட்டம் நம்மை சுற்றி இருந்தாலும் தனித்து நிற்கும் உணர்வைப் பெறுவோம். யாருடனும் வார்த்தைகளால் பகிர்ந்து கொள்ள முடியாத நிமிடங்களாக அவை ஓடும். திடீர் என காலைத் தழுவி இடுப்பு வரை நனைத்து மீண்டும் கைப்பிடிக்குள் அடங்காமல் கடலுக்குள் தொலை தூரம் சென்று விடும் அலைகளாக நமக்கான சில பாடல்கள்… இந்தப் பதிவு அருமை.
இக்பால்
…