விடிய, விடிய கலை இரவு நடத்த அனுமதி வேண்டும்: அமைச்சரிடம் தமுஎகச வேண்டுகோள்

கலை இரவு நிகழ்ச்சிகளை விடிய, விடிய நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகனிடம் தமுஎகச தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன், துணைப்பொதுச்செயலாளர் அன்பரசன் ஆகியோர் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டு நிகழ்த்தப்படும் நாட்டுப்புறக் கலைகளில் பெரும்பாலானவை மாலையில் தொடங்கி விடிய விடிய நிகழ்த்தப்படக் கூடியவை. தனித்துவமான இக் கலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி அந்தி முதல் விடிய விடிய கலை இரவுகளை நடத்தி வருகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இரவு பத்து மணிக்கு மேல் அறிவிக்கப்படாத ஊரடங்கை தமிழ்நாடு காவல்துறை அமல்படுத்தி இக்கலைஇரவுகளை இரவு முழுவதும் நடத்தவிடாமல் இடையூறு செய்கின்றது. இதனால்
பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலைகள் நலியும் நிலை உருவாகியுள்ளது.

மதம் சார்ந்த கோயில் திருவிழாக்கள் மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளாகக் கருதப்பட்டு விடிய, விடிய நடத்த அனுமதிப்பதைப் போல கலைஇரவு நிகழ்ச்சிகளையும் மக்களின் பண்பாட்டு நடவடிக்கையாக வகைப்படுத்தி இரவு முழுவதும் நடத்திட அனுமதிக்க வேண்டுகிறோம். அதே போல் நேரக்கட்டுப்பாடுகளை விதிக்கும் நடைமுறைகளைக் கைவிட வேண்டுகிறோம். மாவட்டம் தோறும் நடைபெற்றுவந்த புத்தகத் திருவிழாக்களுக்கு தேவையான நிதியினை ஒதுக்கி இந்த ஆண்டும், இனிவரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும். மாநில அரசின் நிதி நல்கையில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வந்த கலை இலக்கிய விழாக்கள், மாணவர்களுக்கான – கலைத் திருவிழா, இலக்கியத் திருவிழா, கலை இலக்கிய ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வந்த விருதுகள் மற்றும் சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கனவு இல்லம் போன்றத் திட்டங்கள் தொடர வேண்டும்.

‘அறக்கலகம்’ தயாரித்துள்ள திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் ஆவணப்படம் சென்னையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டு தற்போது யூடியூப்பிலும் உள்ளது. மக்கள் ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் வழமையாகக் கொண்டுள்ள தமிழ்நாட்டு மக்களின் பாரம்பரியப் பெருமையைப் பேசுகிறது. யூடியூபில் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஒன்றிய அல்லது மாநில அரசின் நிர்வாகம் எதுவும் இவ் ஆவணப்படத்தை தடைசெய்திருக்கவுமில்லை. ஆனால் தற்போது இப்படம் திரையிடப்படும் இடங்களில், தமிழ்நாடு காவல்துறை ‘மேலிட உத்தரவு’ எனக்கூறி திரையிடவிடாமல் தடுக்கிறது. இதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். மக்கள் ஒற்றுமை மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் கலைப்படைப்பான திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் ஆவணப்படத்தை திரையிடுவதற்கு தமிழ்நாடு அரசும் குறிப்பாக தமிழ்நாடு காவல்துறையும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான புதிய நலவாரியம் அமைக்கப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கப்படும் நூலக வரியை நூலக மேம்பாட்டுக்காக முழுமையாக பயன்படுத்த வேண்டுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் நூல்களை அவ் ஆண்டின் இறுதியிலேயே நூலகங்களுக்கு கொள்முதல் செய்திட வேண்டுகிறோம். பரிந்துரைக்கப்படும் நூல்கள் குறைந்தபட்சம் ஐநூறு பிரதிகள் வாங்கப்படுவதோடு, நூல்களின் பெயர்களையும் பதிப்பகத்தின் பெயர்களையும் பொதுத்தளத்தில் வெளியிட வேண்டுகிறோம்.

பதிப்பாளர் நலவாரியத்தை புனரமைத்து பதிப்பகத் தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு ஆகியவை வழங்கப்பட வேண்டும். நிறைவடைந்த அகழாய்வுகளின் ஆய்வறிக்கைகளை உடனடியாக வெளியிடுவதோடு, தமிழ்நாட்டின் தொல்லியல் அகழாய்வுத் தளங்களை இணைக்கும் சுற்றுலாத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். வந்தேமாதரம் பாடலின் சில பத்திகள் நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் ஊறுவிளைவிப்பவை என்பதினாலேயே அப்பத்திகளை நீக்கிவிட்டு எஞ்சியவைகளை தேசியப் பாடலாக நம்முடைய இந்திய அரசமைப்பு அவை அன்றைக்கு ஏற்றது.

ஆனால் தற்போதைய ஒன்றிய அரசு முன்பு நீக்கப்பட்ட பத்திகளையும் சேர்த்து தேசியகீதத்திற்கு முன்னதாக இசைக்க வைக்க வேண்டுமெனத் திட்டமிடுகிறது. தற்போது செய்யப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தில் முழுபாடலும் பாடவேண்டும் என்றோ, பாடப்படுவது கட்டாயம் என்றோ இல்லை. தமிழ்நாட்டிலும் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வு என்று கூறி வந்தேமாதரம் முதலில் பாடப்பட்டது மட்டுமன்றி தமிழ்த்தாய் வாழ்த்து கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாடும் மாநில அரசின் வழக்கமும் உரிமையும் புறந்தள்ளப்பட்டது தமிழ்நாடு மக்களிடம் மிகுந்த வேதனையையும் எதிர்ப்பினையும் ஏற்படுத்தியது. சமூக ஒற்றுமையைப் போற்றும் வகையிலும் மாநில உரிமையை பாதுகாக்கும் பொருட்டும் தமிழ்நாட்டில் வந்தேமாதரம் இசைக்கப்படாது என்ற நிலைப்பாட்டோடு, தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கத்திலும் தேசியகீதம் நிறைவாகவும் இசைக்கப்படுமென்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுகிறோம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *