
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் இன்று தீர்மானம் கொண்டுவருகிறார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்தது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறன.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் பொது பட்ஜெட்டும், இரண்டாவது நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டுவருகிறார். இதன்படி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுத்துறைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்படும்.
‘இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது என்ற தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் இன்று முன்மொழிய உள்ளார்.



