வாட்டாள் நாகராஜ் மிரட்டல்: தமிழ்நாடு அரசு பேருந்துகள் இயக்கப்படுமா?

வாட்டாள் நாகராஜ் கர்நாடகாவில் இன்று போராட்டம் அறிவித்துள்ளதால் தமிழ்நாடு அரசு பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதே சமயம், காவிரியின் குறுக்கே அணை கட்டியே ஆகவேண்டுமென கர்நாடக அரசும், கன்னட அமைப்புகளும் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்த நிலையில், காவிரி நீரை தமிழகத்திற்கு திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தியும் கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் வரும் 13-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு கர்நாடக அரசு கேட்டுக்கொண்டது. ஆனாலும், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமென கன்னட கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கன்னட விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லை. எனவே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது. மேலும் மேகதாதுவில் அணை கட்டியே ஆகவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 10-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு கர்நாடக – தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

குறிப்பாக,தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவுக்கு இன்று செல்கிற அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்களை தடுத்து நிறுத்த இருப்பதாகவும், தமிழ்நாட்டு வாகனங்களை கர்நாடகவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்றும் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாடு பேருந்துகள் கர்நாடாகவுக்குள் இன்று நுழைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *