தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் தீர்மானத்தை இன்று முன்மொழிய உள்ளார்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது . இதில் நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, மத்திய அரசின் வரிப் பகிர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப்பகிர்வை உறுதி செய்யக் கோரி தனித் தீர்மானம் சட்டசபையில்ஆகஸ்ட் 7-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளில் மாநிலப் பாடலான ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ முதலில் பாடப்பட வேண்டும் என்கிற தீர்மானம் ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு முறையை அகற்ற வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 11-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதே நாளில், மத்திய அரசின் எஃப்சிஆர்ஏ திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது.

இந்த நிலையில், மத்திய பாஜக கூட்டணி அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் இன்று (ஆகஸ்ட் 12) தீர்மானத்தை முன்மொழிய இருக்கிறார்.அதன்படி நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும். தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும். வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்று முதலமைச்சர் விஜய் சட்டசபையில் தீர்மானத்தை முன்மொழிய இருக்கிறார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *