பெண் ஏட்டு குத்திக்கொலை…. வேலூரில் நள்ளிரவில் பயங்கரம்

வேலூரில் பெண் தலைமைக்காவலர்கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி(40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் அரவிந்தன் (45), ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தாமரைச்செல்விக்கும், அவரது கணவர் அரவிந்தனுக்கும் கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 13) இரவு காவல் நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் தாமரைச்செல்வி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அவரது கணவர் அரவிந்தன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாமரைச்செல்வியை அரவிந்தன் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இந்த திடீர் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் தாமரைச் செல்வி மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தாமரைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரவிந்தனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீஸ் சீருடையில் இருந்த தலைமைக்காவலர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *