
ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு மக்களுக்கு எத்தனை எத்தனையோ காரணங்கள் இருக்கும். பிடித்த நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், அதன் பாட்டுகள், சண்டைக் காட்சிகள், வித்தியாசமான கதை என்று பற்பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், திரைப்படங்கள் அதிகம் பார்க்காத நான். ‘பாண்டி நாட்டுத் தங்கம்’ படம் பார்க்க நேர்ந்த காரணத்தை அறிந்தால் உங்களுக்கே வியப்பாக இருக்கக் கூடும். படம் வந்த உடனேயே சண்முகா லாரி சோ்மக்கனி ( லாரி உரிமையாளர் சண்முகம் பிள்ளை நண்பர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர். அவரது இரண்டாவதுபுதல்வர் சேர்மக்கனி) “பாண்டி நாட்டு தங்கம் படத்துல ஒரு ஸ்டண்டு சீன்ல நம்ம 2845 நடிச்சுருக்கு.. நீ எங்க கூட படத்துக்கு கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும்” என்று வம்படியாக இழுத்துக் கொண்டு போனார்.
அந்தக் காட்சிக்கு லாரி ஓட்டிய டிரைவர், ரெஸ்டில் இருந்த மற்ற டிரைவர், கண்டக்டர்கள், லாரி ஷெட்டில் வேலை பார்த்தவர்கள் என்று பெரும் பட்டாளம் உடன் வந்தது. இடைவேளையில் எல்லோரும் முட்டை போண்டா சாப்பிடும் போது எனக்கு கோன் ஐஸ். உலகில் தெரிந்த லாரி நடித்த படம் என்பதற்காக ஒரு படத்தைப் பார்த்த ஒரே ஆள் நானாகத் தான் இருப்பேன். காத்திருந்து காத்திருந்து, படம் முடியும் தருவாயில் கார்த்திக்கை அடிக்க மூன்று லாரி நிறைய அடியாட்கள் வரும் காட்சியில் 2845 வந்தது. அதிலும் நம்பர் தெளிவாகத் தெரியவில்லை ! பாவம் அந்தக் காட்சியில், அதற்கு க்ளோசப் காட்சிகள் எதுவும் கிடையாது. ‘ஏர்வாடி ராஜா’ என்ற லாரி மட்டும்தான் க்ளோசப் காட்சிகளில் நடித்தது.
இது நடந்து சில நாட்கள் கழித்து நண்பன் கிருஷ்ணன் வந்து என்னிடம் “மாப்ள, பாண்டி நாட்டு தங்கம் பாத்துட்டயா?” என்றான். “பாத்துட்டேன்” என்றேன். “அதுல ‘ஏம்மனசுல பாட்டு தா இருக்குது’ அப்படீன்னு ஒரு பாட்டு இருக்கா? அதுல என்ன விசேஷம்?” என்றான். “ பாட்டு இருக்கு ஆனா, அதுல என்ன விசேஷம்னு தெரியல்லயே மாப்ள,” என்றேன். “என்ன மயித்துக்கு படம் பாத்த?” என்றான் கிருஷ்ணன். நான் சண்முகா லாரியைப் பார்க்க படம் போனேன் என்று சொன்னால், இன்னும் நம்மை எள்ளி நகையாடுவார்களே என்று நான் எதுவும் பதில் சொல்லவில்லை. “இப்ப எதுக்கு அந்த பாட்ட கேக்கற?” என்றேன்.
“மீனா அந்த பாட்ட கேக்கும் போதெல்லாம் நா உன்னத் தா நெனச்சுக்குறுவேன்னு சொல்லிச்சு” என்றான். கிருஷ்ணனின் அப்பா நல்ல ஹார்மோனியக் கலைஞர். பஜனைகளுக்கு முரகர நகதர முகுந்த மாதவ என்று தோடய மங்களம் எல்லாம் பிரமாதமாக வாசிப்பார். கிருஷ்ணன் அவருக்குத் துணையாக ஹார்மோனியம் வாசிப்பான். அவனுக்கும் அவர்களது ஸ்டோரிலேயே பக்கத்துப் போர்ஷனில் இருந்த மீனாவுக்கும் கொஞ்சம் லவ் ஆரம்பித்த காலம். மீனா காதில் பெரிய வளையம் போட்டுக் கொண்டு ‘ஆசைய காத்துல தூது விட்டு’ சுபாஷினி ஜாடையில் இருப்பாள். தினமும் காலையில் அவள் கல்லூரிக்குப் போகும் போது, கிருஷ்ணன் தன் வீட்டு வாசலில் உட்கார்ந்து “இதயம் போகுதே.. என்னையே பிரிந்தே…” என்று வாசித்துக் கொண்டிருப்பான். நான் அந்தப் பாட்டுக்கு நோட்ஸ் கேட்ட போது தர மறுத்து விட்டான். “ஏன், காலைல நீயும் போட்டிக்கு வாசிக்கப் போறயா? அது என்னோட இதயம்”.
ஏம் மனசுல பாட்டை மனதில் ஹம் செய்து கொண்டே, “அந்த பாட்டுக்கும் உனக்கும், மீனாவுக்கும் என்ன சம்பந்தம்?” என்றேன். “நீ தானே மாப்ள படிப்பாளி… அதுதா உங்கிட்ட கேக்க வந்தேன்” என்றான். “ஒண்ணும் பிரச்சன இல்ல. கண்டுபிடிச்சுருவோம்,” என்று சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். நேராக இம்பீரியல் தியேட்டர் வாசலுக்குப் போய், அங்கிருக்கும் பெட்டிக் கடையில் ‘பாண்டி நாட்டுத் தங்கம்’ பாட்டுப் புத்தகம் வாங்கினோம். கிருஷ்ணன் சொன்ன பாட்டைப் பார்த்தேன்.
உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசத கேட்டுத் தான் தவிக்குது
அதில் என்ன வெச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா…
மனசு முழுதும் இசைதான் உனக்கு
அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு..
“மாப்ள … மீனா பெரிய புலவரா இருக்கும் போல,” என்றேன். “எத வெச்சு சொல்ற மாப்ள?” என்றான். “மனசு முழுசும் உனக்கு இசைதானாம். அதுல இட ஒதுக்கீடு கேக்கறா மாப்ள,” என்றேன். அப்போது, கிருஷ்ணனின் முகம் நிஜமாகவே ஒளி வீசியது. ஸ்டேட் மெடிக்கல்ஸ் பக்கத்தில் அப்போது ஒரு பயில்வான் டீக்கடை வைத்திருந்தார். நவீன் பேக்கரிக்கு எதிர்ப்பக்கமாக இப்போதும் அந்தக் கடை இருக்கிறது. நான்கு படி ஏறி மேலே போக வேண்டும். ஓனர் பயில்வான் சங்கிலி முருகன் படங்கள் நாலைந்தில் தலைகாட்டியிருந்தார். கடை முழுக்க அந்த படங்களின் ஸ்டில்கள் தொங்கும். கிருஷ்ணன் அவர் கடையில் டீ வாங்கித் தந்தான். பயில்வான் எனக்கு எப்போதுமே ஸ்பெஷலாக தூள் மாற்றிப் போட்டுத் தருவார் என்பதால் டீ சூப்பராக இருந்தது.
ஏற்கெனவே இசையால் நிரம்பிய மனதில் இப்போது சுபாஷினி ஜாடை மீனாக்கு வேறு இடம் தந்தது எல்லோருக்கும் தெரிந்து, பெரிய பிரச்னையாகி விட்டது. இரண்டு குடும்பங்களும் காலி செய்து கொண்டு எங்கோ போய்விட்டார்கள். கைபேசி இல்லாத காலம் என்பதால் மெய்யாகவே தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விட்டார்கள். ஆனால் அந்தப் பாட்டும், கிருஷ்ணனும், அந்த மீனாவும் மட்டும் மனதில் நிரந்தரமாக இருக்கிறார்கள். இப்போது மகளைப் பார்க்க அடிக்கடி சென்னை பயணம் செல்ல நேர்கிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நாம் இவர்களை எல்லாம் இனி பார்க்கவே முடியாது என்று நினைத்திருந்த எங்கள் பழைய ஏரியாக் காரர்கள் பலரில் 37 பேரை இது வரையில் பார்த்து விட்டேன். போன சென்னை பயணத்தின் போது, மதியம் 2.30க்கு நெல்லை செல்லும் வந்தே பாரத்திற்காகக் காத்திருக்கும் போது, 38-வது நபராக மேற்படி மீனா வந்தாள்.
கையில் ஒரு போத்தீஸ் கட்டைப் பையும், தண்ணீர் பாட்டிலும் தூக்கிக் கொண்டு இப்போதைய சீரியல்களில் வரும் சுபாஷினியாக. அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. வண்ணதாசனின் போய்க் கொண்டிருப்பவள் போல் அவள் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தாள். நாய்க்குட்டி போல ஒரு சூட்கேஸை இழுத்துக் கொண்டு அவளுக்குப் பின்னால் வந்தது கிருஷ்ணன் இல்லை. யாரோ ஒரு சொட்டையன். மீனா இப்போது அந்தப் பாட்டைக் கேட்டால், என்னைப் போலவே கிருஷ்ணனை நினைத்துக் கொள்வாளா?
– ச.சுப்பாராவ் ( தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.




நினைவாற்றல் நன்று. பாவம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிஞ்சா சந்தோச படலாம்.