
மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பூசாரியை போலீஸார் அடித்ததால் அவர் உயிரிழந்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
மதுரை மேல அனுப்பானடி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவம் (52). இவரது மனைவி அய்யம்மாள். அதே பகுதியில் உள்ள கோயிலில் பரமசிவம் பூசாரியாக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் வாகனங்கள் நிறுத்துவது தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இதுதொடா்பாக, கடந்த மாதம் இருதரப்பினா் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பரமசிவம் மனைவி அய்யம்மாள் காயமடைந்தாா். இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் சிந்தாமணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதனிடையே, வழக்கு விசாரணைக்காக கடந்த 19-ம் தேதி பரமசிவத்தை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அப்போது காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் முன்னிலையில் சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் காவலர்கள் பரமசிவத்தை கடுமையாகத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, வீட்டுக்கு வந்த பரமசிவத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நள்ளிரவில் மருத்துவமனைக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள், புகாரைத் திரும்பப் பெறாவிட்டால் கஞ்சா வழக்குப் போட்டு விடுவோம் என்று அவர்களை மிரட்டியதாக குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் பரமசிவம் நேற்று உயிரிழந்தாா்.
இந்த நிலையில், உயிரிழப்பதற்கு முன் பரமசிவம் சில விடியோக்களை பதிவு செய்து, குடும்பத்தினருக்கு அனுப்பினாா். அதில், போலீஸாா் தன்னை கடுமையாக தாக்கியதாகவும், அதனால் என் உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதால், என்னை தாக்கிய போலீஸாா் தான் காரணம். அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இதுதொடர்பாக இறந்த பரமசிவத்தின் உறவினர்கள் கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர், சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர்கள் ஆனந்த், அப்துல் முகமது உள்ளிட்ட சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமசிவம் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் அரசு வேலையும் வழங்க வேண்டும்” என வலியுறுத்தினர்.



