
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக சென்னையில் நாளை சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழகம் உள்ளிட்ட தென்மாநில மக்களின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்ய ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதில் தீவிரமாக உள்ளனர்.
சமீபத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய ஜூலை 20 அன்றே நாடாளுமன்றத்தை நோக்கி பெருந்திரளாக திரண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு பயங்கரமான வன்முறை தாக்குதலை கட்டவிழ்த்து விட்டது. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கும், துப்பாக்கிச் சூட்டிற்கும் உத்தரவிட்டது யார் என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
அந்த பதிலின் மேல் நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் அதற்கான தொடர் போராட்டத்தை நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தி வந்தார். அயோத்தி ராமர் கோயிலில் நடந்த நன்கொடை திருட்டுக்கு துணை போன ஆளும் பாஜக, மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்ற தலைவர் ராகுல்காந்தி அவர்களின் கேள்விக்கு உள்துறை அமைச்சர் பதில் சொல்ல இதுவரை முன்வரவில்லை. நாடாளுமன்றத்தில் தனது அறைக்கு வந்தும் அவைக்கே வராமல் ஓடி ஒளிந்தவர் தான் அமித்ஷா.
நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீது காவல்துறையினரை ஏவிவிட்டு கொடு தாக்குதல் நடத்தியதோடு, மக்களவை தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வரும் போது, நாளை (ஆக.19) மாலை 5 மணியளவில், சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ராஜீவ் காந்தி சிலை அருகில் (வேளச்சேரி சாலை) சத்தியாகிரகப் போராட்டம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக எனது தலைமையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த போராட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்புக் குரலை அமித்ஷாவுக்கு உணர்த்துகின்ற வகையில் அணி திரண்டு வரும்படி அன்போடு அழைக்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



