பாஜகவும், காங்கிரசும் ஒன்று தான்: சட்டசபையில் சி.வி.சண்முகம் விளாசல்

காங்கிரஸும், பாஜகவும் வேறு வேறு ஆள்தானே தவிர உடம்பில் ஓடுவது ஒரே ஜீன்தான் என்று சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது நீட் விவகாரம் தொடர்பாக காரசார இன்று (ஆக.18) விவாதம் நடந்தது. அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். தாரகை கத்பட் பேசுகையில், “ 2011-ல் காங்கிரஸ் ஆட்சியில் எந்தெந்த மாநிலங்களில் நீட் தேர்வு வேண்டாமோ அந்தந்த மாநிலங்களுக்கு விலக்கு கொடுக்கப்பட்டது” என்று கூறினார். இதற்கு“ இவ்வளவு ஆண்டுகளாக நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்தான் என்று இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் தற்பொழுது ஒப்புக்கொண்டீர்களே, அதுவரை சந்தோஷம்’ என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் கூறினார்.

அதற்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், “மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை காங்கிரஸ் ஆட்சிதான் கொண்டு வந்தது. மற்ற திட்டங்களை திருத்தம் செய்வதுபோல் நீட்-க்கு சில திருத்தங்கள் மேற்கொண்டு விலக்கு அளிக்கலாம்” என்று கூறினார்.

அப்போது அதிமுக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசுகையில், “ நீட் தேர்வை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று காங்கிரசும், உச்சநீதிமன்ற உத்தரவின்படிதான் நீட் தேர்வை நடத்துகிறோம் என்று பாஜக உறுப்பினர்கள் கூறுகின்றனர். காங்கிரசும் சரி, பாஜகவும் சரி வேறுவேறாக இருந்தாலும் அவர்கள் உடம்பில் ஓடுவது ஒரே ஜீன்தான். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றத்திலே சட்டத் திருத்தம் கொண்டுவந்து நீக்குவதற்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா? இதற்கு முன் உதாரணம் உள்ளது.

கடந்த 1985-ம் ஆண்டில் பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது, விவகாரத்து பெற்ற முஸ்லிம் பெண் ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்குவதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி, அந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக்கினார். தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கனிமவள திருத்த சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. உச்சநீதிமன்றமானது, மாநிலங்களுக்கு கனிம வளங்கள் மீது ராயல்டி உரிமை இருக்கிறது என தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், தற்போது கனிம வள சட்ட திருத்தம் மூலம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாஜக செல்லாததாக்கியிருக்கிறது.

மாணவர்கள் நலன் மீது உண்மையில் அக்கறை இருந்தால், நீட் தேர்வை நடத்த சொல்லும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் இப்படி ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது செல்லாததாக்கி இருக்கலாமே? மாணவர்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாமே? பாஜகவும் காங்கிரஸும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அரசியல் செய்யத்தான் நீட் உதவுகிறது. அப்பாவி மாணவர்கள் தான் இறக்கிறார்கள்” என்று பேசினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *