
மதுரையில் 11 நாட்களில் 8 கொலைகள் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 17) எம். பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாவட்ட செயலாளர் மா.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன்படி,” மதுரை மாநகரில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரையிலான 11 நாட்களில் மட்டும் 8 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. குறுகிய காலத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலை உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. குற்றங்கள் நடைபெற்ற பின்னர் நடவடிக்கை எடுப்பதைவிட, அவை நடைபெறுவதற்கு முன்பே கண்டறிந்து தடுப்பதே காவல்துறையின் முதன்மை பொறுப்பாகும். எனவே, மதுரை மாநகரின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களின் புழக்கமும், இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் நிலை அதிகரிப்பதும் வன்முறை மற்றும் குற்றச் செயல்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது. போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுப்பதில் காவல்துறை கடுமையான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் குற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதில் முக்கியப் பங்காற்ற வேண்டிய காவல் துறையின் உளவுப்பிரிவின் செயல்பாடுகள் குறித்தும் உரிய ஆய்வு நடத்த வேண்டும். சில காவலர்கள் பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் பணியாற்றி வருவது குறித்தும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவையான நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
குற்றங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் காவல்துறை ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். பழிவாங்கும் வன்முறை, குழு மோதல்கள், போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மதுரை மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அரசின் பொறுப்பாகும். எனவே, தமிழ்நாடு அரசு மற்றும் மதுரை மாநகர காவல்துறை சட்டம், ஒழுங்கு நிலையை உடனடியாக ஆய்வு செய்து, காவல்துறையின் உளவுப்பிரிவைச் சீரமைத்து, போதைப்பொருள் தடுப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்.
மேலும், மதுரை மாவட்டத்தில் அரசு நகரப் பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 41 வழித்தடங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சாமானிய உழைப்பாளி மக்களின் சிரமங்களைப் போக்க மதுரை மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்துத்துறை நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில், வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வரும் நிலையில், காவல்துறையினர் எந்தவித முன்னறிவிப்பும் வழங்காமல் அராஜகமான முறையில் கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். மதுரை மாநகராட்சி நிர்வாகம் காலதாமதமின்றி வெண்டிங் கமிட்டி தேர்தலை நடத்த வேண்டும். மண்டல வாரியாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் பங்கேற்கும் குழுக்களை அமைத்து, சாலையோர வியாபாரிகள் தங்களது தொழிலை ஒழுங்காக நடத்துவதற்கான நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.



