
உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக்கொடுங்கள் என்று முதலமைச்சர் விஜய்க்கு சீமான் பதிலடி தந்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து(கார்) வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மகிழுந்து இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு மகிழுந்து வழங்கினால்கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கெனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?
ஒரு மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் 30 இலட்சம் என்றாலும் 70 கோடி தேவைப்படுகிறது அதைத்தவிர, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் 234 உறுப்பினர்களுக்கும் வழங்குவதால் மேலும் ஆண்டிற்கு 28 கோடி ரூபாய் தேவை. இதுபோக எரிபொருள், வாகனப் பழுது என ஆண்டிற்கு பல நூறு கோடிகள் தேவைப்படுகிறது. அவையெல்லாம் யாருடைய வரிப்பணம்? இதுதான் மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா?
ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25,000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு இலட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன? பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நிதியமைச்சர் மரியவில்சன் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக்கொடுங்கள். மக்கள் பணத்தை எடுத்து ஏன் தருகிறீர்கள்?
அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படி சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் இலஞ்சத்தை ஒழிக்கும் முறையா? விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை. வெட்டவெளியில் கொட்டி வீணாகிறது. அதனைப் பாதுகாக்க விவசாயிகள் கோரினால், வெறும் 10 கோடிக்கு தார்ப்பாய்களை தரும் தவெக அரசு, ஏற்கெனவே ஒன்றுக்கு இரண்டு மகிழுந்து வைத்துள்ள தீயசக்தி, தூயசக்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்து சொகுசு வாகனங்கள் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பது தேவைதானா?
மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படுகையில் அதைச் சரி செய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவை தானா? தேர்தல் பரப்புரையில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 2500 உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணம் இல்லை என்றீர்கள். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது?
சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் சேவைக்கு வந்தார்களா? தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வந்தார்களா? மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? அதற்குத் தனியே சம்பளம் எதற்கு? அரசு அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தின் நன்மை தீமைகளையும் விவாதிப்பதற்கே சட்டமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது எனும் நிலையில், 110 விதி என்ற பெயரில் புதிய திட்டங்களைச் சட்டமன்றத்திலேயே அறிவித்துவிட்டு, அதைப்பற்றி யாரும் எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது என்பதுதான் ஜனநாயகமா? விமர்சனம் செய்யக்கூடாது ஆனால் கேட்கவே கூசும் அளவிற்கு முதலமைச்சரைப் புகழ்ந்து மட்டும் பேசலாமா? மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.”என்று தெரிவித்துள்ளார்.



