
போக்குவரத்து நடத்துநர் பணிக்கு உத்தரபிரதேச நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள், சேலம் அரசு பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக புகார் கிளம்பியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த குப்பூரில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2-ம் வகுப்பு வரை விடுதி வசதியுடன் செயல்படுகிறது. இங்கு 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு நீட், ஜேஇஇ போன்ற தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்த நீட் மறுதேர்வில் இந்த அரசு பள்ளியில் படித்த 5 மாணவ, மாணவிகள் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் (எம்பிபிஎஸ்) படிப்பில் சேர்ந்துள்ளனர். இதன் காரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க போட்டி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதற்காக வட மாநிலங்களை சேர்ந்த ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மொழி தெரியாத வடமாநில ஆசிரியர்களை வைத்து இந்த பள்ளி மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பிக்க முடியும் என்ற சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. இப்படியான செயல்கள் மாணவ, மாணவிகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமூக வலைதளங்களில் புகார் கிளம்பியுள்ளது.
இந்த சர்ச்சை குறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் கூறுகையில், “குப்பூரில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்திருப்பது தொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் விசாரித்து வருகிறோம். அவர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மூலம் சம்பளம் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது”என்று தெரிவித்தார்.
சென்னை போக்குவரத்துக் கழகத்தில் 1797 நடத்துநர் பணியிடங்களுக்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எஸ்.எஸ்.எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சேலம் மாவட்ட அரசு பள்ளிக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநில ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



