காரல் மார்க்ஸ் சரிதம்- 6

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)
1)அடித்தளம் பொருளா தாரம்
அதற்குமேல் இருக்கும் யாவும்
அடித்தளம் காத்தே நிற்கும்
அத்தனை மேற்கூ ரையும்
அடித்தளம் தகர்ந்த தென்றால்
அனைத்துமே ஆட்டம் காணும்
அடித்திதைச் சொன்னான் மார்க்ஸும்
அனைத்துமே உண்மை யாகும்

2)மார்க்ஸ்அவன் வாழ்நாள் எல்லாம்
மறந்திட முடியா நண்பன்
பார்த்திட வந்தான் மார்க்ஸை
பத்துநாட் கள்தான் நின்றான்
சீர்மிகு நண்பன் ஏங்கல்ஸ்
சிறப்புடன் காத்தான் மார்க்ஸை
ஈர்ப்புடன் அவர்கள் ஒன்றாய்
இணைந்துமார்க் ஸிசமே கண்டார்

3)பொருளியல் அமைப்பு(த்) தானே
பொருந்திய அரசைக் கொள்ளும்
அருகியே அரசும் தன்னால்
ஆனதை அதன்மேல் செய்யும்
இருதுறை களுமே ஒன்றாய்
இணைந்துதான் நடக்கும் என்றும்
ஒருதுறை தாக்குறும் என்றால்
உடன்மறு துறையும் ஆடும்.

 (எழுசீர் ஆசிரிய விருத்தம்)

4)ஓலையும் ஒன்று அரசிட மிருந்து
உருட்டியும் மிரட்டியும் வரவே
நாளிதழ் தன்னை நிறுத்தியே விட்டார்
நண்பராம் ரூஜ்எனும் அறிஞர்
வேலையை இழந்தான் மேதையாம் மார்க்ஸும்
மேதினி மீதினில் உடனே
சாலையில் திரிந்தான் வேலையைத் தேடி
தத்துவம் கற்றவன் சிலநாள்

5)கோடையில் வோர்வார்ட்ஸ் எனுமொரு இதழில்
கூர்மதி கொண்டமார்க்ஸ் சேர்ந்தான்
வாடிய அறிஞர் அத்தனை பேரும்
வந்தங்கு சேர்ந்தனர் ஒன்றாய்
கூடியே வாதம் செய்தனர் அங்கு
கோபமும் இரைச்சலும் கொண்டு
கூடிய தங்கே தெருவினில் கூட்டம்
கூச்சலை ரசிப்பதற் கென்று

         (கண்ணிகள்)

1845

6)பாரிஸை விட்டு வெளியேறச் சொன்னாரே
பாட்டாளி வர்க்கத் தலைவனையே- நல்ல
கூரிய சிந்தனை கொண்ட தலைவனோ
கொஞ்சமும் தாமதம் செய்யலையே!

7)பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் மேதையும்
பிரசெல்ஸ் நகரை அடைந்தானே!- ஜென்னி
அப்புறம் மாகக் குழந்தை யுடன்தானும்
அந்நகர் சென்று அடைந்தாளே!

8)சொந்த மரசாமான் அத்தனை யும்ஜென்னி
சொற்ப விலைக்குக்தான் விற்றாளே!- பின்னர்
அந்தப் பணத்தை பயணச் செலவிற்கு
ஆதார மாய்க்கொண்டு சென்றாளே!

9)ஏங்கல்ஸ் எனும்ஓர் நிகரில்லா மேதையும்
ஏப்ரல்மா தம்பிரசெல்ஸ் வந்துவிட்டான்- மார்க்ஸுக்கு
நீங்காத நண்பனாய் சாகும் வரைஅவன்
நின்றுதான் மார்க்ஸிசம் தந்துவிட்டான்

10)‘புனிதக் குடும்பம்’ எனுமொரு நூலினை
புத்திமான்கள் ஒன்றாய் எழுதினரே!- அதில்
துணிவுடன் பாயர் சகோதரர் தம்மையே
தொட்டு விமர்சனம் செய்தனரே
-மனோந்திரா (தொடரும்)

இந்த கவிதைத் தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D லிங்கை கிளிக் செய்யும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *