நினைவே சங்கீதம் 26: இரட்டை வாத்து டாலர் சங்கிலி

என் நண்பர் சிவா வீட்டிற்குப் போகும் போதெல்லாம் அங்கே மாடசாமியைப் பார்ப்பேன். சிவாவின் புதல்வர் இசைக் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தார். மாடசாமி அவரது நண்பர். நல்ல வயலின் கலைஞர். பிறவியிலேயே பார்வையற்றவர். எல்லா பார்வையற்றவர்கள் போலவே அடிக்கடி தன் சட்டையைச் சரி செய்து கொள்வார். பார்வைதான் இல்லையே தவிர அபாரமான இசைஞானம். நினைவாற்றல். புத்திசாலித்தனம். சிவா என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்தபோது, “சார் நீங்க நல்லா ஹைட்டா இருப்பீங்க போல,“ என்றார். நான் வியப்புடன், “எப்படி சொல்றீங்க?“ என்றேன். “ஒண்ணுமில்ல, உங்க வாய்ஸ் கொஞ்சம் உயரத்துலேர்ந்து வருது, “ என்றார் மாடசாமி.

அவர் என் தோளுக்குத் தான் இருப்பார். ‘கைதி’ படத்தில் போலீஸ்காரராக வரும் ஜார்ஸ் மர்யானின் சாயலில் இருப்பார். அவர் வீடு கோமதிபுரம் பக்கம். இரண்டு பஸ் மாறி அய்யர்பங்களா வந்துவிடுவார். எங்கள் ஏரியாவில் அவரை எல்லோருக்குமே தெரியும். மெயின் ரோட்டிலிருந்து அவர் நடந்து வருவதைப் பார்ப்பவர்கள் டூவீலரில் சிவா வீட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டுவிடுவார்கள். மாலையில் நடைபயிற்சிக்கு உடன் வர, சிவாவை அழைக்க நான் தினமும் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் போது, அவ்வப்போது, மாடசாமியுடன் சிறிது நேரம் பேசுவதுண்டு.

போன வாரம் அப்படிப் போன போது, சிவாவின் மகனும், மாடசாமியும் ஏதோ பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தார்கள். சிவா மாடசாமியிடம் “சாருக்கு ஏதாவது வாசிச்சுக் காட்டுப்பா” என்றார். மாடசாமி, வில்லில் வேகமாக ரோஸினைத் தேய்த்து விட்டு, வயலினை தோளில் சாய்த்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். சீர்காழியின் ‘கண்ணன் வந்தான்’ பாட்டு.

‘பசிக்கு விருந்தாவான், நோய்க்கு மருந்தாவான்’ என்று தொகையறாவில் வயலின் பேசியது. அந்த ஒரு வரியில் கல்யாணி ராகத்தின் முழு உருவத்தையையும் காட்டிவிட்டார் மாடசாமி. விழிகள் எங்கோ மேலே சொருகியிருக்க, கண்ணின் வெள்ளைப் படலம் மட்டும் தெரிய,
முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
என்று அவர் வாசிக்கும் போது எனக்கு துக்கம் பொங்கியது. இந்தப் பாட்டை ஏன் இவர் வாசிக்க வேண்டும் என்று வேதனையாக இருந்தது. கடவுள் ஏன் முதலில் ஒருவரைப் பார்வை இல்லாதவராகப் படைக்க வேண்டும்? பிறகு தன் கருணையைக் காட்டும் விதமாக அவரை காண வைக்க வேண்டும் என்று கடவுள் மீது கோபமாகவும் வந்தது. பாட்டை வாசித்து முடித்ததும் நான் மௌனமாக எந்த பாராட்டும் சொல்லாமல் இருந்தது மாடசாமியைக் கஷ்டப்படுத்தி விட்டது போலும். “சார், நா சரியா வாசிக்கல்லையா? ” என்றார் பாவமாக. எனக்கு துக்கம் இன்னும் அதிகரித்தது. “அற்புதமா வாசிச்சீங்க. ஆனா, இந்தப் பாட்டு வாசிச்சிருக்க வேண்டாம். எனக்கு என்னமோ மனசுக்கு கஷ்டமா இருக்கு” என்றேன். சிவா, “வேற நல்ல பாட்டா வாசிப்பா” என்றார்.

துன்பம் தருவதும் இசைதான். அந்தத் துன்பத்தைத் தீர்ப்பதும் இசைதான் என்பதை அன்று நான் நேரடியாக உணர்ந்தேன். மாடசாமி மீண்டும் வில்லை எடுத்தார். லேசாக ஒரு ஆலாபனை. மோகனம் போலவும் இருக்கிறது. கல்யாணி போலவும் இருக்கிறது. ஒருவேளை மோகன கல்யாணியோ? ஆம்.. அதே தான். ஆலாபனை முடித்து, துண்டால் முகத்தை ஒரு முறை துடைத்துக் கொண்டு பாட்டை ஆரம்பித்தார்.
தேன் மல்லிப் பூவே…
பூந்தென்றல் காற்றே…
என் கண்ணே.. என் ராணி….
நீயின்றி நான் இல்லயே…..
முத்தாரம் மார் மீது தவழ்கின்றது…
எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு….
அந்த ஒரு வரியில் நான் எங்கோ சென்றுவிட்டேன். சிவாஜியின் நடிப்பு, டி.எம்.எஸ்ஸின் கம்பீரமான குரல், சிவாஜிக்காக மெனக்கெட்டு எம்.எஸ்.வி பாணியில் இசையமைத்த இளையராஜா எல்லோரும் காணாமல் போய், கண்ணதாசனின் அந்த ‘முத்தாரம் மார் மீது தவழ்கின்றது’ என்ற வரி என் இனிய ஸ்நேகிதி கவிஞர் உமா மோகன் எழுதிய இரட்டை வாத்து டாலர் சங்கிலி என்ற அற்புதமான கவிதையை நினைவுபடுத்துகிறது. நான் அப்படியே நாற்பதாண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டேன்.

நான் எல்ஐசியில் பணிக்குச் சேர்ந்த போது, புதிய ஊழியர்களுக்கு முதல் பதினைந்து நாட்கள் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த வகுப்பு எல்ஐசி அலுவலகத்தில் நடக்காமல், மாலைமுரசு அலுவலகத்திற்குப் பக்கத்திலிருந்த விக்டரி டுடோரியல் சென்டரின் வகுப்பறையில் நடந்தது. பள்ளிக்குச் செல்லும் பீதியோடு நான் சென்ற போது, என்னோடு வேலைக்குத் தேர்வாகி இருந்த பெண்கள் எல்லோருமே பெரிய டாலர் வைத்த செயின் அணிந்து தான் வந்திருந்தார்கள். அதிலும் இரட்டை வாத்து வைத்த சங்கிலி அணிந்த ஒருத்தி பின்னாளில் எனக்கு மிக நெருக்கமான ஸ்நேகிதியானாள். காலத்தால் அழிந்து போன எத்தனையோ பொருட்களில் ஒன்றான அந்த இரட்டை வாத்து டாலரை கண்ணதாசனின் வார்த்தைகளில் மாடசாமி நினைவூட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. அவரைத் தொட்டு அணைத்து என் வாழ்த்தைத் தெரிவித்தேன்.

நடைபயிற்சி முடிந்து வீடு வந்ததும், என் அந்த ஸ்நேகிதியை ( பழைய ஸ்னேகிதி என்று சொல்லக் கூடாது, ஸ்னேகத்தில் ஏது பழையதும், புதியதும்? என்று எங்கோ படித்திருக்கிறேன் !) கைபேசியில் அழைத்தேன். முழங்கால் வலி, சுகர், உடல் எடை குறைப்பு, பற்றிய பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, “என்ன விசேஷம் ? திடீர்ன்னு ஃபோன் பண்ற?” என்றாள்.
“நீ சிரிக்காட்டி ஒண்ணு கேப்பேன்” என்றேன்.
“அதெல்லாம் சிரிக்கல்ல, சொல்லு”.
“முந்தி வேலைக்கு வந்த புதுசுல டெய்லி வாத்து வெச்ச டாலர் மாட்டின செயின் போட்டுட்டு வருவ இல்ல, அது இப்பவும் இருக்கா?” என்றேன்.
“இருக்கு. அக்ச்சுவலா அது எங்க அம்மாவோடது. மேரேஜ் அப்ப எனக்கே கொடுத்துட்டாங்க. நா கொஞ்ச நாள் போட்டுட்டு திரிஞ்சேன். அப்பறம் உள்ள வெச்சுட்டேன். பாப்பா மேரேஜ்க்கு அவளுக்கு கொடுத்துட்டேன். எதுக்கு இப்ப அத கேக்கற?” என்றாள்.
“சும்மா கேட்டேன்” என்றேன்.
”ஏய், நீ அத வெச்சு கத எழுதப் போற !” என்றாள்.
“அப்படித் தான்னு வெச்சுக்கயேன்” என்றேன்.
என் தலைமுறை இன்னும் வழிவழியாய் வந்த இரட்டை வாத்து டாலர் சங்கிலியை பத்திரப்படுத்தி, தன் வாரிசுக்கு சீதனமாகத் தந்து கொண்டிருப்பதை நினைக்க ஏனோ மனதுக்கு நிறைவாக இருந்தது. மனம் முழுக்க தேன் மல்லிப் பூ…. மோகன கல்யாணி.
ச.சுப்பாராவ் ( தொடரும்)

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87 லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *