
அறிவாலயத்தை குறை சொல்லுகின்ற ஒரு தறுதலை கூட்டம் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது என்று ஆ.ராசா கூறினார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசினார். அப்போது, “இனிமேல் அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விட்டுவிட்டு, அவர்கள் வேறு வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள்” என்று பேசினார். இதற்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.
கலைஞரின் சகோதரி மகன் இயக்குநர் அமிர்தம் இல்ல திருமண விழா சென்னையில் இன்று (ஆக.24) நடைபெற்றது. இதில் ஆ.ராசா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதன் பின் அவர் பேசுகையில், கலை, இதழியல், அரசியல் எல்லா தரப்புக்கும் கலைஞர் குடும்பத்திலே இடம் இருக்கிறது என்பதற்கு கலைத்துறைக்கு சாட்சியாக இருக்கின்ற அண்ணன் அமிர்தம் அவர்களுடைய குடும்பம் திகழ்கிறது. அந்த குடும்பத்தினுடைய குலக் கொழுந்துகள் இன்றைய தினம் தங்களுடைய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்கள்.
இன்றைக்கு சில தறுதலைகளுக்கு காரிலே தேசியக் கொடி வந்துவிட்ட காரணத்தினால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என்று சில தறுதலை அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த குடும்பத்திலே நடைபெறுகின்ற இந்த விழாவில் சொல்கிறோம்: பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் அரசியலில் கிரகப்பிரவேசம் நடத்திய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு வெள்ளை அடித்துக் கொண்டார்கள்.
அறிவாலயம் தோன்றிய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு பலமுறை வெள்ளை அடித்துக் கொண்டனர், தமிழ்நாடு தனக்கு வெள்ளை அடித்துக் கொண்டது. எனவே, அந்த அறிவாலயத்தை குறை சொல்லுகின்ற ஒரு தறுதலை கூட்டம் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த தறுதலைக் கூட்டத்தை ஓட்டுவதற்கு எல்லா முயற்சிகளும் எடுப்போம் என்று பேசினார்.



