தமிழக முதலமைச்சர் விஜய்க்கு பரந்தூர் விவசாயிகள் நன்றி

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பரந்தூர் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதற்கு திமுக உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயிகள் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும், முதலமைச்சருக்கு நெற்கதிர்களையும், குலதெய்வ புகைப்படத்தையும் கொடுத்தனர்.

இதன் பின் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பரந்தூரில் பசுமை விமான நிலையத் திட்டத்தை மாநில அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தோம். இந்தப் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான புவியியல் அமைப்பும், சாத்தியக்கூறுகளும் இல்லை என்பதை பல்வேறு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் அரசிடம் தொடர்ந்து எடுத்துரைத்தோம்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும். நஞ்சை, புஞ்சை உள்ளிட்ட விவசாய நிலங்கள் அழியும் அபாயமும் ஏற்பட்டிருக்கும். மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க சுமார் 1,100 ஆண்டுகள் பழமையான கம்பன் கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து உள்ளிட்ட நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்றும், சென்னை மாநகரின் மேற்குப் பகுதிகளில் இருந்து வரும் வெள்ளநீர் தேங்குவதால் எதிர்காலத்தில் சென்னை பெருநகரமே வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும் என்றும் அரசிடம் எடுத்துக்கூறினோம்.

மேலும் வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பறவைகள் வந்து செல்லும் பகுதிகள், நெல் மற்றும் புஞ்சை விவசாய நிலங்கள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகள் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்கத் தேர்வு செய்தது தவறான முடிவு என்பதையும் தொடர்ந்து சுட்டிக்காட்டினோம். தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக முதல்வருக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விவசாய நிலங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்காத வகையில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான மாற்று இடத்தை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பரந்தூர் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *