ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னையில் கடந்த 2024-ம் ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்திய செம்பியம் போலீஸார், முதற்கட்டமாக 28 பேரை கைது செய்தனர். அவர்களில், திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இக்கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றம்சாட்டி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் இருவர் வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், காவல்துறையின் விசாரணையில் திருப்தியில்லை எனத் தெரிவித்த ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தை அணுகினார். இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து புதிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். கடந்த வாரம் சிபிஐ எஸ்பி தலைமையிலான அதிகாரிகள், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பெரம்பூர் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கொலை நடைபெற்ற இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், கொலை நடைபெற்றபோது அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளையும், சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, கொலைச் சம்பவத்தைத் தடுக்க முயன்ற அவரது சகோதரர் வீரமணி மற்றும் மற்றொரு சகோதரர் கினோஸ் ஆகிய மூவரிடமும் சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள 27 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இக்கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார், யார், கொலைக்கான திட்டம் எங்கு தீட்டப்பட்டது என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் தேவைப்படும்பட்சத்தில் மாநில காவல்துறை அதிகாரிகளிடமும் இந்த கொலை வழக்குத் தொடர்பாக நேரில் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *