
திருவள்ளூர் அருகே காவல் நிலையம் அருகே வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரை அடுத்த சிட்டத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி என்ற ரூபன் (33). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மின்துறை ஊழியர்களிடம் தகராறு செய்த வழக்கில் மாரி சிறையில் அடைக்கப்பட்டு பின்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக வெங்கல் காவல் நிலையத்தில் மாரி ஆஜராகி கையொப்பமிட்டு வந்தார். இந்த நிலையில், இன்று (ஆக.25) காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு விட்டு நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் டூவீலரில் மாரி திரும்பியுள்ளார். அப்போது அவரை காரில் பின் ஒரு கும்பல் பின் தொடர்ந்து வந்துள்ளது. திடீரென மாரியின் டூவீலரை அந்த கார் இடித்து தள்ளியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மாரியை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மாரி உயிரிழந்தார். இதன் பின் அந்த கும்பரில் தப்பியது.
இந்த படுகொலையை பார்த்த பொதுமக்கள், கொலைக்கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் காவல் நிலையம் அருகே நடந்த கொலைச் சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



