வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்….நேபாளத்திற்கு விரையும் தமிழக அதிகாரிகள் குழு

பெருவெள்ளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் சிக்கியுள்ள நிலையில், தமிழக ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழு நேபாளத்திற்கு செல்கிறது.

நேபாளம் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 160 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 750 பேர் காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 103 பேர் நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அதில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 27) நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நேபாள நாட்டுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 103 நபர்கள் கைலாஷ் யாத்திரைக்காக இரண்டு குழுக்களாகச் சென்றுள்ளனர். அதில் முதல் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த 54 நபர்களும், புதுச்சேரியைச் சேர்ந்த 3 நபர்களும் என மொத்தம் 57 நபர்களும், இரண்டாவது குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 49 நபர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உட்பட பலர் காணாமல் போனதாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிடும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாகவும் அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டன.

மேலும், இப்பேரிடரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை, நேபாள நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம், புதுடெல்லியிலுள்ள தமிழக இல்ல அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பயண முகவர் நிறுவனங்களின் உதவியுடன் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் விஜய், தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில், புதுடெல்லி தமிழக இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழுவினர் நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்திட உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மீட்கப்பட்டுள்ள 20 தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்திடவும், மேலும் தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையினைக் கண்டறிந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்திடவும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க. தென்னரசு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் மற்றும் அயலகத் தமிழர்நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை இயக்குநர் ரெ. சதீஸ் ஆகியோர் புதுடெல்லியிலுள்ள தமிழக இல்லத்தில் முகாமிட்டு, மீட்புப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவர்.

அத்துடன், நேபாளத்திலிருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உளவியல் ஆலோசனைகளை மருத்துவக் குழுவினர் மூலம் வழங்கிடவும், அவர்களைப் பத்திரமாக தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *