
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து மன்னர் அல்ல. நீதிமன்றத்தில் அவர் ஆஜராக மாட்டேன் என்று சொல்ல முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
தமிழ்நாடு நிதி அமைச்சராக இருப்பவர் மரிய வில்சன். இவர் 2022-ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள அவரது சகோதரர் மரிய க்ளோத் வீட்டுக்குள் புகுந்து கட்டையால் தாக்குவது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மரிய வில்சன் மீது அவரது சகோதரர், லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பான வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டும் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய கேட்டும் அதுவரை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கேட்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மரிய வில்சன் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்து உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மரிய வில்சன் அவரது சகோதரர் குடும்பத்தினரும் சமரச நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். ஆனால் சமரச உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த சூழலில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று (ஆகஸ்ட் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது மரிய வில்சன் சார்பில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருவதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி, ‘மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து மன்னர் அல்ல. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்தார்’ என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்தார். இதனைத்
தொடர்ந்து புதுச்சேரி காவல்துறை சார்பில், அமைச்சர் மரிய வில்சன் வேளாங்கண்ணி ஆலய கொடியேற்று நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பி வரும்போது நீதிமன்றத்தில் ஆஜராகலாமே என்று கேள்வி எழுப்பினார். ‘மரிய வில்சன் சட்டத்துக்கு மேலானவர் அல்ல. அவர் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் என்று சொல்ல முடியாது’ என்று கூறிய நீதிபதி, எந்த தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராகிறார் என்பதை கேட்டு தெரிவிக்கும்படி அவரது தரப்புக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆகஸ்ட் 31-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவதாக மரிய வில்சன் தரப்பில் கூறியதோடு, இந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.



