
நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
நேபாளத்தில் ரசுவா மற்றும் மத்திய நேபாளத்தின் பிற பகுதிகளில் ஏற்பட்ட கடந்த புதனன்று ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பெருவெள்ளம் குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் நிலையக் கட்டமைப்புக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. 2,931 நேபாள ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 7451 பாதுகாப்பு பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
.உயிர் பிழைத்தவர்களை வெளியேற்ற ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நேபாள வெள்ளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை, திருச்சி,கிருஷ்ணகிரி, ஓசூர், மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ராஜ்மோகன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் ஆகியோர் டெல்லியில், மத்திய அரசின்
வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்தனர். அப்போது நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற தமிழர்களை மீட்பது தொடர்பாக மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் காத்மண்டுவில் இருந்து நேற்று மதியம் 2.15 மணிக்கு, 21 தமிழர்களுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் மதியம் 3.45 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இதன்பின்னர் தமிழர்கள் 21 பேரையும் தமிழ்நாடு அமைச்சர்கள் நேற்று நேரில் வரவேற்றனர். இதன்பின்னர் இரவு 8 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர்கள், நேற்று இரவு 11.15 மணியளவில் சென்னை வந்தடைந்தனர். அவர்கள் 21 பேரையும் தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த், சரத்குமார் ஆகியோர் நேரில் வரவேற்றனர்.



