காரல் மார்க்ஸ் சரிதம்- 7

                      (இயற்கும்மி)

1)செப்டம்பர் மாதத்தில் ஜென்னியும் லாராவை
சேய்யென வேநன்றாய்ப் பெற்றெடுத்தாள்
அப்பெண் குழந்தையை பாசமாய் காரல்மார்க்ஸ்
அன்புடன் தானே வளர்த்துவந்தான்

2)பிரஷ்ய பிரஜா உரிமைதனை காரல்
பெரிதென எண்ணிட வில்லையன்றோ!
துறந்தான் அதைஅவன் மாதம் டிசம்பரில்
துணிவுடன் என்பது உண்மையன்றோ!

3)கற்பனை யில்தான் பொருள்முதல் வாதக்
கலையை வளர்த்தார் முன்பிருந்தோர்
அற்புத மான இயங்கியல் கொண்டு
அறிவிய லாக்கினான் மார்க்ஸ்அதை

4)இருக்கும் உலகை விளக்கினர் மண்ணில்
இதுவரை தோன்றிய ஞானியரே
திருப்பி அதனையே போடுவ தெப்படி
சிந்திக்கச் சொன்னானே காரல்மார்க்ஸ்

5)பூர்ஷுவா வர்க்கப் புரட்சிகள் என்றுமே
பாட்டாளி போருக்கு தேவைஅவை
தூர்ந்திடச் செய்யும் நிலவுட மைதன்னை
தொடரும் எளிதாய் உழைப்பவர்போர்

6)ஆலை நிறைந்ததாம் ஆங்கிலேயர் நாட்டை
அறிந்திட வேண்டியே நண்பர்களும்
ஜூலை பன்னிரெண்டில் சென்றனர் மூலதன
சூட்சுமம் கற்றுத் தெளிந்திடவே!

7)சார்டிஸ்ட் இயக்கச் செயல்பாட்டைப் பற்றித்
தகவல் பலவற்றை சேகரித்தார்
ஊர்முழுக்க மக்கள் உரிமைக் கெனஅவர்
ஓயா துழைத்ததைக் கண்டுவந்தார்

8)உலகம் முழுவதும் பாட்டாளிக் கென்றுமே
ஒற்றை நலன்மட்டும் உள்ளதுகாண்!
கலகம் விளைவித்து ஈனச் சுரண்டலை
காசினி தன்னில் ஒழிப்பதுதான்!

9)பூமி முழுவதும் பாட்டாளிக் கென்றுமே
பூர்ஷ்வாக்கள் மட்டுமே சத்ருக்களாம்
நேமிப் படைகொண்டு பாட்டாளி கள்அதை
நிர்மூல மாக்கி அழிப்பர்களாம்!!

10) இந்த வருடம்தான் மார்க்ஸின் குடும்பத்தார்
இன்பமாய் வாழ்ந்ததாய்ச் சொல்லிடுவர்
வந்ததெல் லாம்வெறும் துன்பங்கள் மட்டுமே
வாழ்க்கை முழுவதும் என்றுசொல்வர்
-மனோந்திரா (தொடரும்)

இந்த கவிதைத் தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *