நினைவே சங்கீதம் 27: காலம் அதன் கோலம்

நினைவே சங்கீதம் 27: காலம் அதன் கோலம்

மதுரை மீனாக்களால் நிறைந்தது போலவே அழகர்களாலும் நிறைந்தது. மதுரையின் பல்லாயிரக்கணக்கான அழகர்களில் ஒரு அழகர் என் உயிர் நண்பன். படிப்பு வரவில்லை என்று பத்தாவதோடு நிறுத்திக் கொண்டு, பெயிண்டர் வேலைக்குப் போய்விட்டான். நட்பிற்கு ஒத்த ரசனை என்பதெல்லாம் தேவையில்லை என்பதற்கு எங்கள் நட்பை உதாரணமாகச் சொல்லலாம். வாழ்க்கையில் இன்று வரை ஒரு புத்தகம் கூட படித்திராத அழகர் என்னோடு எல்லா புத்தகத் திருவிழாக்களுக்கும் வருவான். நான் கேட்ட அத்தனை அற்புதமான கர்னாடக இசைக் கச்சேரிகளுக்கும், ஆங்கிலத் திரைப்படங்களுக்கும் உடன் வந்தவன். வந்து கொண்டிருப்பவன். வேலைக்குச் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் என்னுடனேயே சுற்றித் திரிந்தவன். மனைவி,குழந்தை என்று ஆனபிறகு, இயல்பாகவே சேர்ந்து சுற்றுவது சற்று குறைந்தது.

சோவியத் ரஷ்யக் கதைகளில் சொல்வது போல், நாங்கள் இளமையின் தலைவாயிலில் இருந்த போதே விதி அவன் வாழ்வில் விளையாடி விட்டது. ஒரு மாட்டுப் பொங்கலன்று காலை அவன் அம்மாவிற்கும், அப்பாவிற்கும் ஏதோ சண்டை. அப்பா கோபித்துக் கொண்டு சட்டையை மாட்டிக் கொண்டு எங்கோ போய்விட்டார். இவன் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டான். இரவு வீடு சென்ற போது அப்பா வரவில்லை என்று அம்மா அழுது கொண்டிருந்தாள். அதன்பிறகு இன்று வரை அவர் திரும்பி வரவேயில்லை. அம்மா அழுதழுதே உயிரை விட்டாள்.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக இருந்த அவனது அப்பா ஓய்வு பெற சில மாதங்கள் மட்டுமே இருந்த போது இது நடந்தது. தேடாத இடமில்லை. காணாமல் போனவர் பற்றிய தொலைக்காட்சி அறிவிப்பில் நமக்கு மிகவும் வேண்டிய ஒருவர் பற்றியே சொல்வதைக் கேட்க நேரிடும் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை. திடீரென்று யாராவது ஒருவர் கன்னிவாடி கிட்ட ஒரு வாழத்தோப்புல உங்க அப்பா வாட்ச்மேனாக இருக்காரு என்பார். கன்னிவாடிக்கு ஓடுவார்கள். மானாமதுரைல ஒரு புரோட்டாக் கடையில உங்க அப்பா மாதிரியே ஒருத்தரு வேல பாக்கறாரு என்பார் ஒருவர். அங்கே போய் பார்த்தால் அது வேறு யாரோ ! போனவர் போனவர்தான்.

பெரிய குடும்பம், எல்லோருக்குமே குறைந்த சம்பள வேலை.. அப்பாவின் வேலைக்கான பணப் பயன்களும் வராத சூழல் என்று சொல்ல முடியாத துயர். அழகரின் ஒரே ஆறுதல் எங்களோடு ஊர் சுற்றுவது மட்டும்தான்.
அன்று ஏனோ மற்ற நண்பர்கள் யாரும் எங்களோடு வரவில்லை. நானும், அழகரும் மட்டும் ரீகல் தியேட்டரில் ஏதோ ஆங்கிலப் படத்திற்கு இரவுக் காட்சிக்குப் போனோம். படம் முடிந்து நடந்து வருகிறோம். அழகர் ரயில் நிலையத்தின் வாசலிலும், ஹெட் போஸ்ட் ஆபீஸ் திருப்பம் வரையிலுமான ரயில்வே காம்பவுண்ட் சுவரையொட்டியும், சாக்குகளையும், கிழிந்த கந்தல்களையும் போர்த்திக் கொண்டு தூங்கும் பிளாட்ஃபாரவாசிகளை குனிந்து குனிந்து உற்றுப் பார்த்தபடி வந்தான். நான் எதுவும் பேசாமல் உடன் வந்தேன்.

சேதுபதி ஸ்கூல் வாசலில் அழகர் என்னிடம், “அவரு மதுரைல எல்லாம் இருக்கமாட்டாருன்னு தெரியுது. ஆனாலும், இப்படி யாராவது பிச்சக்காரங்க போர்வைய போத்திட்டு படுத்திருந்தா போர்வய வெலக்கி முகத்தப் பாக்கணும்னு தோணுது”, என்றான். அதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? “வா , கிருபால ஒரு காப்பி சாப்ட்டுட்டு போகலாம்” என்றேன். அது மதுரை நிஜமாகவே தூங்கா நகரமாக இருந்த காலம். எல்லா தியேட்டர்களிலும் நைட்ஷோ படம் விடும் வரை டீக்கடைகள் திறந்திருந்த காலம். சேதுபதி பள்ளி சிக்னலில் வலது பக்கம் திரும்பி, ஹிக்கின்பாதம்ஸ் தாண்டி, எஸ்.எஸ்.பிள்ளை ஷாப்பிற்கு அடுத்தபடி இருந்த கிருபா டீ ஸ்டாலுக்குப் போனோம். கிருபாவில் அப்போது தான் பட்டர் பன் அறிமுகமான நேரம். வெண்ணெயின் வாசனை மதுரை முழுக்க, எங்கும் நிறைந்திருந்தது.

முதலாளி என்னைப் பார்த்ததும், “ரெண்டு காப்பி, நல்லா ஸ்ட்ராங்கா ” என்று சவுண்ட் விட்டார். கிருபாவின் அற்புதமான நேஷனல் பேனாசோனிக் செட்டில் டி.எம்.எஸ் ‘ஆண்டவன் இல்லா உலகம் எது…………….’ என்று தொகையறா பாட, பின்னால் ஒரு புல்லாங்குழல் சோகத்தைப் பிழிந்தது. ‘ஆசைகள் இல்லா இதயம் எது…..’என்றதும் மீண்டும் அந்த சோகப் புல்லாங்குழல்.
நதியிருந்தால் மீனிருக்கும்
விதியிருந்தால் சேர்ந்திருக்கும்
காலம்…. அதன் கோ….லம்…..
எங்கோ…. எங்கோ…
..
அசரீரியாய் ஒலிக்கும் பாடல்களுக்கு எங்கிருந்து தான் ஒரு சோகம் வருகிறதோ? காலம் .. அதன் கோலம்…. எங்கோ… எங்கோ… என்ற அந்த ஒரு வரியில் அழகர் திடீரென்று கண் கலங்கி விட்டான். நானும் அப்படியே உடைந்து போனேன். என் முகம் போன போக்கைப் பார்த்த கிருபா முதலாளி “பாட்ட அமத்துடா…” என்று வேலை பார்க்கும் பையனுக்கு உத்தரவிடுகிறார். கிருபா கடை காப்பியை சுவையுணராது குடித்த ஒரே சந்தர்ப்பம் அதுதான். எதுவும் பேசாமல் இருவரும் மௌனமாக வீடு வந்தோம்.

இந்தப் பாட்டை கேட்கும் போதெல்லாம் கனம் என்றால் மகாகனமாக மேலெழும், மென்மை என்றால் நம்பமுடியாத அளவிற்குக் குழையும் என்று ஆத்மார்த்தி ஒரு கட்டுரையில் டி.எம்.எஸ் குரல் பற்றிச் சொல்லியிருப்பது இந்தப் பாடலுக்காகத் தான் இருக்குமோ என்று எனக்குத் தோன்றும். பாட்டைக் கேட்கும் போது, ஸ்டெப் கட்டிங் வைத்த கமல், ஜிமிக்கி போட்டு, நீண்ட ஒற்றைப் பின்னலை வலது மார்பின் மீது போட்டுக் கொண்டிருக்கும் அழகான சுஜாதா, டி.எம்.எஸ், வாணி ஜெயராம் குரலுக்காக நடிக்கும் அந்த பாரதியார் கெட்டப் ஆண், ரவிக்கை போடாத, திறந்த தோள் கொண்டஅந்த இளம் துணை நடிகை ( அவர் தான் பின்னாளில், ஜானி படத்தில் என் வானிலே பாட்டில், ஸ்ரீதேவி நீரோடை போலவே என் பெண்மை…, நீராட வந்ததே என் மென்மை… என்ற பாடும் போது, மாடிப்படியில் உட்கார்ந்து ரசிக்கும் வேலைக்காரப் பெண்மணியாக நடித்தவர்) எல்லாம் மறந்து போய், அழகர் கண் கலங்கியது மட்டும் தான் கண்முன் நிற்கும்.

இந்த ஆடி அமாவாசையன்று அழகருக்கு ஏதோ வேலை என்று போன் செய்தேன். எடுக்கவில்லை. பிறகு மதியத்திற்கு மேல் அவனே அழைத்தான். “ஆடி அமாவாசை இல்ல. திதி கொடுக்க திருவேடகம் போயிட்டேன்” என்றான். பிறகு அவனே, “ எங்க பெரியண்ணன் போயே பத்து வருஷமாச்சு. அப்பா இருந்தா, இப்ப வயசு 90-க்கு மேல இருக்கும். இருக்க வாய்ப்பில்லன்னு இப்ப ரெண்டு மூணு வருஷமா திதி தர்றோம்.. உயிரோட இருக்க வாய்பில்லன்னு தா தோணுது. இருக்காரா, செத்தாரான்னு தெரியாம, செத்த தேதி கூட தெரியாம, திதி கொடுக்கறது மாதிரி ஆகிப் போச்சு நம்ம வாழ்க்கை” என்றான் கசப்பாக. எனக்கு மனதில் கா…. லம்….. அதன் கோ….லம்… தான் எப்பவும் போல ஒலித்தது.
ச.சுப்பாராவ் (தொடரும்)

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *