
நெடுஞ்சாலைத்துறையில் நேர்மையான பொது பணியிட மாறுதல் நடைபெறவில்லை என்று நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தவெக அரசு பொறுப்புக்கு வந்தவுடன் அரசு துறைகளில் நேர்மையான பொது பணியிட மாறுதல் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை மாறுதல் உத்தரவு வெளிப்படையாக வரவில்லை. தனி நபர்கள் கோரிய விருப்ப மாறுதல் உத்தரவாக சில நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது நேர்மையான நடவடிக்கை இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு நிர்வாக செயல்முறை குளறுபடிகள் நடந்தவாறு தான் இருக்கின்றன. இவற்ற சரிசெய்ய வேண்டிய அமைச்சர் அவர்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
நிர்வாக குளறுபடிகள் சரி செய்யப்படும் என்று இந்த அரசு வாக்குறுதியின் அடிப்படையில் போராட்ட நடவடிக்கையை கைவிட்டோம். ஆனால், அவை சரி செய்யப்படாததோடு குளறுபடிகள் மேலும் அதிகரித்து வருகிறது. பல மாதங்களாக தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வும், பொது பணியிட மாறுதலும் வழங்கவில்லை என்பதை மன வேதனையோடு தெரிவிக்க விரும்புகிறோம். எனவே, உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலையிட்டு இப்பிரச்னையில் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும். அப்படி ஏற்படாத நிலையில், அனைவரும் ஒருங்கிணைந்து நெடுஞ்சாலைத்துறையில் போராடும் நிலை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.



