எஃப்க்யூஎல் செயலி மூலம் 1,000 கோடி ரூபாய் மோசடி

எஃப்க்யூஎல்  செயலி மூலம் மக்களிடம் 1,000 கோடி ரூபாய் மோசடி

எஃப்க்யூஎல் செயலி மூலம் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை கிராமங்களில் உள்ள மக்களிடம் ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் புகார்கள் அளித்துள்ளனர்.

ஆன் லைன் மோசடியில் எஃப்க்யூஎல் என்ற நிறுவனம் ஈடுபட்டதாக புகார்கள் குவிந்து வருகின்றன. மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள கட்டயம்பட்டியில் எஃப்க்யூஎல் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. ரஞ்சித் என்பவர் வெளிநாட்டில் சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார். அவர் எஃப்க்யூஎல் என்ற செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். லண்டனை தலைமையிடமாகக் கொண்ட அந்த நிறுவனம் கிரிப்டோ கரன்சியில் வர்த்தகம் செய்து குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டித்தரும் ஒரு முதலீட்டுத் தளமாக இந்த நிறுவனம் விளங்குவதாகக் கூறப்படுகிறது.

இந்த செயலி மூலம் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் 500 டாலராக கணக்கில் வரவு வைக்கப்படும். 50 நாட்களில் ஆயிரம் டாலரிலிருந்து 2,500 டாலராக பல்கி பெருகும் என்று கூறப்பட்டது. 500 டாலரை அப்படியே வைத்து விட்டு மீதி லாபத்தை எடுத்துக் கொள்ளலாம் என எஃப்க்யூஎல் செயலி கூறுகிறது. இந்த செயலி குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட ரஞ்சித் அதன் முதலீட்டாளராக சேர்ந்துள்ளார். வெளிநாட்டிலிருந்து 3 ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்த ரஞ்சித் இந்த எப்.கியூ.எல் ஆப் செயலியை தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துள்ளார். அதில் முதலீடு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்காக முகவர்களையும் நியமித்துள்ளார்.

ஒரு சில மாதங்களிலேயே இந்த செயலி குறித்த தகவல் மதுரை, நத்தம், மேலூர் பகுதிகளில் காட்டுத் தீ போல பரவியது. முதன்மை ஏஜெண்டாக செயல்பட்ட ரஞ்சித் சொன்னபடி பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைத்தது. ரஞ்சித் பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்துள்ளார். கணவனும், மனைவியும் சேர்ந்து எப்.கியூ.எல். செயலியில் முதலீடு செய்ய ஒவ்வொரு ஊருக்கும் ஏஜெண்ட்டுகளை நியமித்துள்ளனர். 50 நாட்களில் முதலீடு பணம் முதிர்வடைந்ததால் கிடைத்த அமெரிக்க டாலரை ரஞ்சித்துக்கு ஷேர் செய்தால் அந்த டாலரை 2 நாட்களில் டாலரின் மதிப்பிலான இந்திய ரூபாயை ஜி.பே மூலமாகவோ, அல்லது ரொக்கப் பணமாகவோ கையில் கொடுத்து விடுவார். இதற்காக 30 சதவீதம் கமிஷன் பெற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

ரஞ்சித் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த கிரிப்டோகரன்சி செயலியான எப்.கியூ.எல். எக்சேஞ்ச் செயலியில் ஆயிரக்கணக்கானவர்கள் முதலீடு செய்துள்ளனர். பலருக்கு முதிர்வு பணம் கிடைத்து எடுத்துக்கொண்டனர். பலர் அந்த பணத்தை எடுக்காமல் பல்கி பெருகவேண்டும் என்பதற்காக அப்படியே விட்டுவிட்டனர். இந்நிலையில், ரஞ்சித் எப்.கியூ.எல். செயலி போல வி.ஜி. இன்வெஸ்ட்மெண்ட் குரூப் ஐஎன்சி என்ற புது செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலிக்கான ஏஜெண்ட்டுக்களையும் ரஞ்சித் உருவாக்கினார்.

எப்.கியூ.எல். செயலியைப் லோவவே மல்டிலெவல் மார்க்கெட்டி யுக்தியை பயன்படுத்தியுள்ளார் ரஞ்சித். எப்.கியூ.எல். செயலிக்குப் பதிலாக தனது வி.ஜி. இன்வெஸ்ட்மெண்ட்டில் முதலீடு செய்தால் 30 நாட்களிலேயே பணம் முதிர்வுக்கு வந்துவிடும் என்று ஆஃபர்களை கொடுத்துள்ளார். ரஞ்சித் ஆப்பில் ஏஜெண்ட்டுக்களாக இருப்பவர்களுக்கு தங்கம், பைக், சொகுசு கார், வில்லா போன்ற சலுகைகளை வழங்கினார். இதனால் ஏஜெண்ட்டுக்கள் துரிதமாக செயல்பட்டு வாடிக்கையாளர்களை அதிகளவில் பிடித்தனர். ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தனர்.

இந்நிலையில் எப்.கியூ.எல். செயலியில் போட்ட பணத்தை பொதுமக்கள் எடுக்க முடியவில்லை. வி.ஜி. இன்வெஸ்ட்மெண்ட் செயலியில் போட்ட பணத்தையும் எடுக்க முடியாத நிலையில் முதலீடு செய்த மக்கள் ரஞ்சித் மற்றும் முகவர்கள் வீடுகளை அடித்து நொறுக்கியுள்ளனர். நத்தம் பகுதியில் ரமேஷ் என்ற முகவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்த போலீஸ் வேன் மீது கிராம மக்கள் கல்லெறிந்து தங்கள் எதிர்ப்பை காட்டினர். இதனால் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நத்தம் காசம்பட்டியில் வசிக்கும் பொதியன் மகன் ;ரமேஷ், அவரது மனைவி அனிதா, வெள்ளைத்துரை மகன் விஜய், சரவணன் மகன் தினேஷ் ஆகியோர் முகவர்களாக செயல்பட்டு வந்துள்ளர். இவர்களை நம்பி காசம்பட்;டி, வத்திப்பட்டி, ரெட்டியபட்டி, புதுக்கோட்டை, கவிராயன்பட்டி, பரளி, கேத்தாம்பட்டி, லிங்கவாடி, சாத்தன்பட்டி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 30 ஆயிரம் பேர் ரூ.1 லட்சம் வரை என ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் கடயம்பட்டியில் உள்ள எப்.கியூ.எல் மற்றும் வி.ஜி. இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் மூடப்பட்ட செய்தியறிந்து திண்டுக்கல், நத்தம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பதற்றம் நிலவுகிறது. அந்த ஆன்லைன் மோசடி செயலியின் முகவர்கள் தலைமறைவாகியுள்ளனர். இது நத்தம், மதுரை, மேலும் சுற்றுவட்டாரங்களில் முதலீடு செய்தவர்களிடம் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது. இந்த மோசடி குறித்து திண்டுக்கல்லில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போலீஸாரிடம் புகார்கள் கொடுத்துள்ளனர்.

செட்டியார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 நாட்கள் போலீஸார் நடத்திய முகாமில் மட்டும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக ரஞ்சித், பிரியதர்ஷினி மற்றும் அவர்களின் ஏஜெண்ட்டுகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளான ரஞ்சித், பிரியதர்ஷினிஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *