பேரவையில் அமைச்சர்களின் ஆதாரமற்ற கருத்துகள்: பெ.சண்முகம் கண்டிப்பு

பேரவையில் அமைச்சர்களின் ஆதாரமற்ற கருத்துகள்: பெ.சண்முகம் கண்டிப்பு

அமைச்சர்கள் ஆதாரமற்ற கருத்துகளைத் தெரிவிப்பதும், குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் தவறானது என்று பெ.சண்முகம் கூறினார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “ சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் லாவணி கச்சேரி மன்றம் போல் செயல்படுகின்றன. இதிலிருந்து மாற்றத்தைக் கொண்டுவர சபாநாயகர் தீவிர முயற்சி மேற்கொண்டாலும், இரு தரப்பினரும் அதை ஏற்க மறுத்து வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மானியக் கோரிக்கைகளுக்குச் சம்பந்தம் இல்லாத விஷயங்களைப் பேசுவதால் சட்டமன்றத்தின் மதிப்பு குறைகிறது.

சட்டமன்றத்தை ஆக்கபூர்வமாக நடத்துவதில் மற்ற எல்லோரையும் விட ஆளுங்கட்சிக்குத் தான் கூடுதல் பொறுப்பு உள்ளது. அமைச்சர்கள் ஆதாரமற்ற கருத்துக்களைத் தெரிவிப்பதும், குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் தவறானது. ஒவ்வொரு முறையும் சட்டமன்றப் பதிவேடுகளில் இருந்து தகவல்கள் நீக்கப்படுவது அதிகரித்துள்ளது. சபை குறிப்பில் இருந்து கருத்துக்களை நீக்குவது என்பது எப்போதாவது நடக்கும் ஒன்று,

ஆனால், தற்போது சபை குறிப்பில் இருந்து நீக்குவது சபாநாயகரின் அன்றாட வேலையாகிவிட்டது. இது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கோ ஆளும் கட்சிக்கும் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம் அல்ல. இதை உணர்ந்து அமைச்சர்கள் கவனத்தோடு பேச வேண்டும். சபாநாயகரும் மானியக் கோரிக்கையை மீறி யார் பேசினாலும், குறுக்கிட்டு கடுமையாகத் தடுத்து சபையைக் கட்டுக்கோப்பாக நடத்த வேண்டும்” என்றார்.

நடிகர் விஜய்யை தவெக கட்சியினர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து பெ.சண்முகத்திடம் செய்தியாளர்கள் வினா எழுப்பினர். அதற்கு அவர், “தவெக கட்சியினர் தங்கள் விருப்பத்தையும் ஆசையையும் தெரிவித்துள்ளனர்; இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை” என்று பதிலளித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *