
தந்தை பெரியாருக்கு எதிராக அவதூறு கருத்து பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா, கடந்த 2018-ம் ஆண்டு லெனின் சிலை உடைக்கப்பட்டது போல, தமிழ்நாட்டில் பெரியார் சிலையை உடைப்பேன் என்று எக்ஸ் வலைதளத்தில் கருத்து பதிவிட்டார். இதையடுத்து அவர் மீது ஈரோடு டவுன் மற்றும் கருங்குளம் காவல் நிலையங்களில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதே போல், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கு எதிராகவும் அவதூறு கருத்துக்களை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதற்காக ஹெச் ராஜா மீது முன்னாள் அமைச்சர் செல்வராஜ், ஈரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரு வழக்குகளும் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி – எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல், பொது அமைதிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதால், கலவரத்தை தூண்டுதல் பிரிவு 153, பொது அமைதியை குலைப்பது பிரிவு 504-ன் படி பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், மொத்தமாக 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2024-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தார்.
இந்த சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஹெச். ராஜா தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற எம்.பி. – எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்தது. இதனைத் தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றத்தின் சிறை தண்டனை உத்தரவை எதிர்த்து ஹெச். ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2024-ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்து.
இந்த வழக்கில் இன்று (செப்டம்பர் 1) உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநராயணன் தீர்ப்பளித்தார். அப்போது, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஹெச். ராஜாவின் பேச்சு இல்லை. பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவரது கருத்து உள்ளது என்பதற்கான போதுமான ஆதாரங்களும் இல்லை என தெரிவித்து, ஹெச். ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.



