3-வது குழந்தைக்கு 365 நாள் மகப்பேறு விடுப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

3-வது குழந்தைக்கு 365 நாள் மகப்பேறு விடுப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை 365 நாட்களாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையில், “ 2021-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இரண்டு குழந்தைகளை கொண்ட திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்தப்படுகிறது.

இதனிடையே, 2026 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்ட திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு 12 வாரங்களுக்கு மிகாமல் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், 2026-27-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்காக தற்போது வழங்கப்படும் 12 வார மகப்பேறு விடுப்பு, 365 நாட்களாக உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த விடுப்பு முழு ஊதியத்துடன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மகப்பேறு விடுப்பு காலம், குழந்தை பிறப்பதற்கு முந்தைய ஓய்வு காலம் முதல் குழந்தை பிறந்த பிறகு உடல்நலம் தேறும் காலம் வரை, அரசு பெண் ஊழியரின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த விடுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த அரசாணை வெளியிடப்பட்ட ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு முன்பே 3-வது குழந்தைக்காக மகப்பேறு விடுப்பில் சென்று, அந்த தேதியிலும் தொடர்ந்து விடுப்பில் இருந்த பெண் அரசு ஊழியர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். அவர்கள் ஏற்கெனவே எடுத்த விடுப்பையும் சேர்த்து, மொத்தமாக 365 நாட்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பு பெற தகுதி பெறுவார்கள். இந்த விதி நிரந்தர மற்றும் தற்காலிக பணியில் உள்ள திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் . அமைச்சர் சரத்குமாரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தற்போது நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற பணியில் உள்ள திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்காக வழங்கப்படும் 12 வார மகப்பேறு விடுப்பு, முழு ஊதியத்துடன் 365 நாட்களாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *