
மதுரை மத்திய சிறைச்சாலையில் 100 கோடி ரூபாய் ஊழல் புகார் வழக்கை விரைந்து விசாரித்து, 4 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமைகள் மைய இயக்குநருமான பி.புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “மதுரை மத்திய சிறையில் கைதிகளால் தபால் அனுப்புவதற்கான கவர்கள், அட்டைகள், மருத்துவ உதவிப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவை பல்வேறு அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
அதற்காக கைதிகளுக்கு சம்பளம் கொடுத்தது போல போலியாக கணக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 2016 – 2021-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 100 ரூபாய் கோடி வரை ஊழல் நடந்திருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக தெரியவந்துள்ளது. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. அதேவேளையில், புகாரில் முகாந்திரம் இருந்தால் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கை விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு சிறைவாசியின் மனைவி கோகிலா தாக்கல் செய்திருந்த மனுவில், “எனது கணவர் சிறையில் உள்ள பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். ஆனால், அவருக்கு உரிய சம்பளமோ நன்னடத்தை மதிப்பெண்ணோ வழங்கப்படவில்லை” என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கானது, நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகழேந்தி, “சிறைவாசிகளுக்கு சம்பளம் வழங்கியது போன்று போலிக்கணக்கை உருவாக்கி சுமார் 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டினார். விசாரணை மிக மந்தமாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட காவல்துறை தரப்பு வழக்கறிஞர், விரிவான விசாரணையை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவை எனவும், விரைந்து விசாரித்து முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதத்திற்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்யத் தவறினால் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற நேரிடும்” என எச்சரித்துள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்க உத்தரவிடப்படும் என்று எச்சரித்துள்ளனர்.



