
தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் தவெக எம்எல்ஏ சத்தியபாமா பேரவையை வழிநடத்திய முதல் பெண் மாற்று பேரவை தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்குப் பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகராக தவெக எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் நியமிக்கப்பட்டார். பேரவை துணைத்தலைவராக துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.சபாநாயகர் இல்லாத நேரங்களில் ரவிசங்கர் பேரவையை வழிநடத்தி வருகிறார்.
அதேபோல், பேரவை மாற்று தலைவர்களாக, தவெக எம்எல்ஏக்கள் விஜய் சரவணன், சத்தியபாமா, மதார் பதுருதீன் ஆகியோரும், காங்கிரஸைச் சேர்ந்த தாரகை கத்பட், திமுகவைச் சேர்ந்த காதர் பாட்சா முத்துராமலிங்கம், அதிமுகவைச் சேரந்த தளவாய் சுந்தரம் என 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையில் சபாநாயகர் அல்லது துணைப் பேரவை தலைவர் இல்லாத நேரங்களில் மாற்றுத் தலைவராக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் சட்டப்பேரவையை வழிநடத்துவது மரபாகும்.
அந்த வகையில் பேரவையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் துணை பேரவை தலைவர் ரவிசங்கர் இன்று(செப்டம்பர் 2) இல்லாத நேரத்தில், திருப்பூர் சட்டமன்ற தவெக உறுப்பினர் சத்தியபாமா சிறிது நேரம் பேரவையை வழிநடத்தினார். சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு பெண் மாற்று பேரவை தலைவர் பேரவையை வழிநடத்தியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு பெண் பேரவை தலைவராக அமர வேண்டும் என்பது நீண்டகால எதிர்பார்ப்பு. ஆனால் இப்போது மாற்றுத்தலைவராக எம்எல்ஏ சத்தியபாமா அமர்ந்திருப்பதை பார்க்கும்போது பேரவையில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார். இதற்கு சத்தியபாமா நன்றி தெரிவித்தார். பின்னர் அவைக்கு வந்த பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், சத்தியபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.



