இனி 12 சான்றிதழ்கள் வழங்க துணை தாசில்தார்களுக்கு அதிகாரம்

வருவாய் சான்றிதழ்கள் உள்பட 12 சான்றிதழ்களை துணை தாசில்தார் நிலையிலேயே வழங்கும் வகையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தாலுகா தாசில்தார்களால் வழங்கப்பட்டு வந்த குறிப்பிட்ட வருவாய் சான்றிதழ்களை இனி சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் ஆகியோரும் வழங்கும் வகையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாசில்தார்களின் பணிச்சுமையைக் குறைத்து, பொதுமக்களின் விண்ணப்பங்கள் தேங்காமல் விரைவாக சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் 26 வகையான மின்னணு சான்றிதழ் சேவைகளை இ-சேவை மையங்கள் மூலம் வழங்கி வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களுக்காக வருவாய் சான்றிதழ்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், தாசில்தார்களுக்கு விண்ணப்பங்களின் பணிச்சுமை அதிகரித்து, சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனைத் தவிர்க்கும் வகையில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார்களின் பணிச்சுமை குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான தாலுகா தாசில்தாரிடம் இருந்து சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தாருக்கு பின்வரும் சான்றிதழ்கள் மற்றும் உரிமம் தொடர்பான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பட்டியல் சாதி சமூகச் சான்றிதழ், சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழ், பிற்படுத்தப்பட்டோர் வகுப்புச் சான்றிதழ், ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுக்கு மூன்று அடுக்கு சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் நடைமுறை பின்பற்றப்படும். அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார் ஆகியோர் அடிப்படையில் இந்த ஒப்புதல் நடைமுறை அமையும்.

அதேபோல், தாசில்தார் வழங்கி வந்த 12 வகையான சான்றிதழ்களை இனி துணை தாசில்தார் நிலையிலேயே வழங்கும் வகையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவை முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ், கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ், வேளாண் வருமானச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், வேலையின்மைச் சான்றிதழ், குடும்ப இடம்பெயர்வு சான்றிதழ், சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ், பேரிடர்களால் கல்விச் சான்றுகள் இழந்ததற்கான சான்றிதழ் ஆகிய சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருமணமாகாதவர் சான்றிதழ், ஆண் குழந்தை இல்லாதவர் சான்றிதழ், பணக்கடன் வழங்குநர் உரிமம், வேலைவாய்ப்புக்கான முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களை துணை தாசில்தார் அளவில் வழங்குவதன் மூலம், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் காலத்தையும், சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் கால தாமதத்தையும் குறைக்க முடியும்” என அரசு தெரிவித்துள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *