
உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும் என சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (செப்டம்பர் 3) பேசுகையில்,“உலகின் தொன்மையான மொழி என்றால் அது தமிழ் மட்டுமே. அத்தகைய சிறப்புமிக்க தமிழ், நமது அலுவலகப் பயன்பாட்டில் மட்டுமன்றி, ஆட்சி, கல்வி, தொழில்துறை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்திய அரசு தமிழுக்கு செம்மொழி என்ற சிறப்புத் தகுதியை வழங்கியுள்ளது. தமிழை வளர்ப்பதும், பாதுகாப்பதும் நமது கடமை மட்டுமல்ல,
உலகில் சிறப்புமிக்க மொழிகளில் ஒன்றாக விளங்கும் தமிழை மேலும் வளர்த்து, அதன் பெருமையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்பது நமது பொறுப்பு. தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம், 1956-இன் பிரிவு 4-ன் கீழ், குறிப்பிட்ட ஆட்சி பணிகளுக்கு தமிழைப் பயன்படுத்த அரசு அறிவிப்புகள் மூலம் உத்தரவிடலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதிலும் முக்கியமாக, மேற்படி சட்டத்தில் 1956-ம் ஆண்டில் செய்யப்பட்ட திருத்தங்களின் மூலம், உயர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள், வாடகை நீதிமன்றங்கள் மற்றும் பிற நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளைப் பதிவு செய்வது, தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் மற்றும் உத்தரவுகளை தமிழிலேயே வழங்குவதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் ஏற்கெனவே சட்டரீதியான நீதிமன்ற மொழியாக உள்ளது. அந்த நீதிமன்ற அமைப்பின் மாநிலத்தின் உச்ச நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்றத்திலும் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 348(1)-ன்படி, இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் அனைத்து உயர் நீதிமன்றங்களின் நடவடிக்கைகளில் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதே சட்டப்பிரிவு 348(2)-ன்படி, மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன், அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியை மாநில உயர்நீதிமன்ற வழக்குகளில், அதாவது நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்கு அதிகாரம் வழங்க முடியும் என்று தெரிவிக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திட மத்திய அரசை இந்தப் பேரவை வலியுறுத்த வேண்டும். ஒரு சாதாரண குடிமகன் தனது வாழ்நாள், குடும்பம், சொத்து, வேலை, வழக்கு மற்றும் நீதிமன்றத்தில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்து தனது தாய்மொழியில் புரிந்துகொள்ள முடிய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நீதி வழங்குவதும், நீதியைப் பெறுவதும் மேலும் வலுப்படும். நீதி பரிபாலனத்தில் மக்களும், அவர்களின் தாய்மொழியும் பங்கெடுப்பதால், நீதியின் செயல்முறை மேலும் வலுப்பெறும்.
தமிழ்நாட்டில் மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவுபடுத்துவது ஒரு இயல்பான அடுத்தகட்ட நடவடிக்கையாகும். எனவே, தமிழ் மொழியை சென்னை உயர் நீதிமன்றத்தில் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அதிகாரப்பூர்வ நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தப் பேரவையில் முன்மொழிகிறோம். இந்தத் தீர்மானத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தந்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றம் ஏற்கெனவே 2006-ம் ஆண்டு சட்டமன்றத்தில் தமிழை நீதிமன்றங்களில் பயன்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான தமிழ்நாட்டின் முன்மொழிவு, இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டதாகவும், பின்னர் அது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடமிருந்து உரிய ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும் மத்திய அரசின் சட்ட அமைச்சர் கடந்த காலங்களில் தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் என்று இந்தப் பேரவை கருதுகிறது” என்று கூறினார். இந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றிய பிறகு, தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



