தவெக கூட்டணியை உடைக்க முயற்சி: திமுக, பாஜக மீது காங்கிரஸ் புகார்

காங்கிரஸ், தவெக கூட்டணியை உடைக்க திமுக, பாஜக வேலை செய்வதாக ஆனந்த் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

பொருளாதார நிபுணரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடக பிரிவின் மாநில தலைவருமான ஆனந்த் சீனிவாசன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் பேசும்போது, இந்தியா 7.8 சதவீதம் வளர்ந்திருக்கிறது. பொருளாதாரம் நன்றாக இருக்கிறது. ஆனால், வெளிநாட்டுக்கு செல்லாதீர்கள். தங்கம் வாங்காதீர்கள். இந்தியாவில் உற்பத்தி செய்யும் பொருட்களை மட்டும் வாங்குங்கள் என்று மோடி கூறுகிறார்.

கடந்த வருடம் இதே நேரத்தில் 80 லட்சம் கோடி வருமானம் வந்திருக்கிறது. இந்த வருடம் 88 லட்சம் கோடி வருமானம் வந்திருக்கிறது. இதற்கு வித்தியாசம் 8 லட்சம் கோடி என்று சொல்கிறார். இந்தியாவில் 10.3 சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது. விலைவாசி 2.50 சதவீதம் தான் உயர்ந்திருக்கிறது என்று சொல்கின்றனர். ஆனால், ஒரு ஆண்டில் வெங்காயம் விலை 63.10 சதவீத அளவும், சர்க்கரை விலை 41 சதவீத அளவும், சூரிய காந்தி எண்ணெய் விலை 18.50 சதவீதமும் உயர்ந்துள்ளது. வணிக கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி என்பது 4 சதவீதம் தான் இருக்கும். இது வளர்ச்சியே இல்லை.

எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், 2.8 சதவீதம் தான் விலைவாசி உயர்வு என்று பிரதமர் மோடி கூறுகிறார். நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் தானே இருக்கிறது. பிறகு ஏன் வெளிநாடு செல்லவேண்டாம், தங்கம் வாங்க வேண்டாம் என மோடி சொல்ல வேண்டும்? என்னை பொறுத்தவரையில் தங்கம் வாங்குவது நல்லது. இந்தியாவின் பொருளாதாரத்தை பார்த்தால், பங்கு சந்தையில் சரிவு உள்ளது. வங்கி காப்பீடு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு இல்லை. வேலையிழப்பு தான் உள்ளது. இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டுகளில் முதலீடு செய்கிறார்கள். தங்கம் தான் லாபம் தரும் முதலீடாக உள்ளது. ஆனால் அந்த தங்கத்தை வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி சொல்கிறார்.

காங்கிரஸ் – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களில் வெற்றி பெறப்போவது உறுதி. அதை தடுக்கவும், காங்கிரஸ், தவெக கூட்டணியை உடைக்கவும் திமுகவும், பாஜகவும் வேலை செய்கிறது” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *