காரல் மார்க்ஸ் சரிதம்- 8

               1846
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

1)உலக இயக்கம் உற்பத்தி
உறவு சக்தி போன்றவற்றை
விலகி நிற்கா தென்பதையே
விளக்கிச் சொன்னான் காரல்மார்க்ஸ்
கலகம் அதற்குள் உருவாகும்
கலைந்து போகும் பழமைதான்
மலரும் புதிதாய் ஒருசமுகம்
மனிதம் உயரும் ஒருபடிதான்

2)வருக்கம் அரசு ஆகியவை
வகைவே றாக இருந்தாலும்
ஒருநா ணயத்தின் இருபுறமாய்
ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும்
வருக்கம் முதலில் தோன்றியதால்
வருக்கம் முதலில் அழிந்திடணும்
சருகாய்ப் பின்னர் அரசும்தான்
சன்னஞ் சன்ன மாய்உதிரும்

3)வாழ்வு தன்னை உணர்வுநிலை
வடிவம் செய்து வைப்பதில்லை
வாழும் நிலையே உணர்வாக
வடிவம் கொள்ளும் எனும்கருத்தை
ஆழ்ந்து ஆய்ந்து சொன்னானே!
அன்றே ஞானி காரல்மார்க்ஸ்
வாழ்க்கை அதனை நன்றாக
மனிதர் தமக்கு உணர்த்திடுமே!

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

4)வரலாற்றை இயக்கவியல் தன்னோடு இணைத்து
வாகாகத் தன்கருத்தை அதனுடனே பிணைத்து
வரலாற்றுப் பொருள்முதல்வா தம்தனையே வகுத்தான்
மார்க்ஸ்என்ற மாமேதை அந்நாளில் நன்றாய்
கரகோஷம் எழுப்பியதைக் கற்றறிந்தோர் ஏற்றார்
கற்பனைசோ ஷலிசத்தை கல்லெடுத்து அடித்தார்
பரலோகம் தனிலல்ல இகலோகம் தனிலே
பாங்குடனே பொன்னுலகம் அமையுமென்று சொன்னான்

5)உழைப்பாளர் உழைப்பினிலே ஒளிந்திருக்கும் உபரி
உண்மையிதைக் கண்டறிந்தான் ஒப்பில்லா ஞானி
பிழைக்கின்றார் உபரிதின்று பெருந்தொழில்கள் தம்மில்
பிறர்உழைப்பில் கொழுக்கின்ற பூர்ஷ்வாக்கள் எல்லாம்
இழக்கின்றார் தம்உதிரம் இனியஉழைப் பாளர்
இறுதிவரை உழைத்துழைத்து ஓடாகத் தேய்ந்து
தழைக்கிறது அதனாலே முதலாளித் துவம்தான்
தடையின்றி உபரிதனை உறிஞ்சித்தான் உலகில்

6)ஜென்னியவள் பதிமார்க்ஸும் ஏங்கல்ஸும் சேர்ந்து
‘ஜெர்மனியச் சித்தாந்தம்’ எனும்நூலைச் செய்தார்
வன்மொழிகள் கொண்டு ‘பாயர்’ ‘மேக்ஸ்ஸ்டெர்ன’ ரோடு
வலிய”ஃபாயர் பேக்”கையுமே விமர்சனங்கள் செய்தார்
பொன்னான வரலாற்றுப் பொருள்முதல்வா தத்தை
பொறுப்புடனே வடிவமைத்துத் தந்தார்கள் இதிலே
அந்நாளில் இந்நூலை வெளியிடஆ ளின்றி
அநியாய மாய்எலிக்கு உணவான தையோ!

1847 ஜுன் 2-9

7)‘உலகத்தொழி லாளர்களே ஒன்றிணைவீர்!’ என்ற
ஒப்பற்ற முழக்கமதை இருவர்*முன் வைத்தார்
கலகத்தின் குறியீடாய் அமைந்ததிந்த முழக்கம்
கவனத்துடன் களைந்ததிது உழைப்பாளர் கலக்கம்
சுலபத்தில் உலகெல்லாம் பரவியதிம் முழக்கம்
சோஷலிச அம்புகளாய்த் தாக்கியது இலக்கம்
குலைநடுங்கிப் போனதுகாண் முதலாளி வர்க்கம்!
கோஷமிதை முழங்கையிலே பாட்டாளி வர்க்கம்

8)‘வறுமையின்தத் துவ’மென்ற நூலொன்றை பிரௌதான்
வழங்கினானே உலகிற்கு; மார்க்ஸ்அதனை மறுத்தான்
அருமைமிகு ‘தத்துவத்தின் வறுமை’யெனும் நூலை
அவனிக்குத் தந்தானே அறிஞனவன் மார்க்ஸும்
பொறுமையுடன் இருக்கவேண்டும் பாட்டாளி என்று
போதித்தான் பிரௌதானும் பொறுக்கவில்லை மார்க்ஸும்
புரட்சியெனும் வழியொன்றே பொன்னுலகைச் செய்யும்
பொறுமைகாக்கச் சொல்வதிலே பொருளில்லை என்றான்
*மார்க்ஸ்-ஏங்கல்ஸ்

(வெண்டளையான் அமைந்த தரவு கொச்சகக் கலிப்பா)

9)இரங்கித்தான் பூர்ஷ்வாக்கள் ஏதும்தருவ தில்லை
அரக்ககுணம் கொண்டிருப்பார் அன்பவருக் கில்லை
திரண்டுமக்கள் போரிடாமல் தீங்குசாவ தில்லை
புரட்சியின்றிப் பூவுலகில் பொன்னுலகம் இல்லை

10)புரட்சிபல செய்தனரே பூர்ஷ்வாக்கள் முன்பு
இறந்தததன் காரணத்தால் எண்ணிலாத தீங்கு
உரமெனவேக் கொண்டதிலே ஊக்கமது பெற்று
பாரினிலே முன்னேறும் பாட்டாளி வர்க்கம்
-மனோந்திரா (தொடரும்)

இந்த கவிதைத் தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *