
கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் எல்ஐசி பணி என்ற மெயின் வேலை இருந்தாலும், பகுதி நேரப் பணியாக நண்பர்கள், உறவினர்கள், அவர் தம் வாரிசுகளுக்கு வாசிப்பு, இசை சம்பந்தமான ஆலோசனைகளை வாரி வழங்கும் கலை, இலக்கிய ஆலோசகராக இருப்பது எனது பகுதி நேரப் பணியாக இருந்து வருகிறது. “எங்க பாப்பா கிண்டில் வாங்கணும்னு சொல்லுது… எங்க வாங்கலாம்? என்ன மாடல் வாங்கலாம்? “ “மதுரைல நல்ல கீபோர்ட் சொல்லித் தா்ற வாத்தியார் யார்?” “தம்பிக்கு வயலின் தந்தி அறுந்து போச்சு. கொஞ்சம் தந்தி மாத்தி ட்யூன் பண்ணித் தரணும்,” என்பதான பார்ட் டைம் வேலைகள் , ஆலோசனைகள் , உதவிகள் கேட்டு கோரிக்கைகள் வந்து கொண்டே இருக்கும். இப்படி என்னிடம் ஆலோசனைகள் கேட்பதை ஆரம்பித்து வைத்தவன் பாலாஜி.
என்னைப் பார்த்து இசை வெறி கொண்ட முதல் ஆள் என்பதால் அவன் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனீ… பாசம் உண்டு. ஆரம்ப காலத்தில் நான் லட்சுமி சுந்தரம் ஹால் சங்கீத சமாஜத்தில் வயலின் வகுப்பு சேர்ந்த போது, எனக்கு பின்னாளில் பக்க வாத்தியம் வாசிக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு மிருதங்கம் வகுப்பில் சேர்ந்தவன் அவன். சமாஜத்தில் அவரவர் வாத்தியாருக்காக வெற்றிலை, புகையிலை வாங்கச் செல்வது, மாதாமாதம் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர் எழுதுவது, சக மாணவர்கள் தரும் கட்டணத்திற்கு ரசீது போடுவது போன்ற பணிகளை முதன்மையாக செய்து கொண்டு, கிட்டத்தட்ட குருகுலம் போல் கற்றுக் கொண்டது இருவருக்குமே சரிப்படவில்லை. எதையும் உருப்படியாக செய்யாத என் இயல்பின்படி நான் ஒரு சுபயோக சுபதினத்தில் கீபோர்ட்டில் மேற்கத்திய இசை பயிலச் சென்றேன்.
என் இசைவாழ்வைப் பின்தொடரும் சீடனான பாலாஜி ஒரு நாள் ,“ மாப்ள, உன்னோட வயலின் சும்மாதானே இருக்கு,” என்று கேட்ட போதே எனக்கு கதக்கென்று இருந்தது. என் வீட்டு கழிப்பறை வரை சுதந்தரமாகச் சென்று வருபவன் என்பதால் அவனிடம் வயலினை விற்று விட்டேன் என்றெல்லாம் பொய் சொல்ல முடியாது. “ஆமா,” என்றேன். “ நா வெஸ்டர்ன் வயலின் சேரலாம்னு இருக்கேன்,” என்றான். சரி, எம்எஸ்விக்கு ராமமூர்த்தி, இளையராஜாவிற்கு வி.எஸ்.நரசிம்மன் என்றிருப்பது போல நமக்கும் ஒரு பாலாஜி இருக்கட்டும் என்று எனக்கும் தோன்றியது ! ஆங்காங்கே என் ஆர்க்கெஸ்ட்ரா நண்பர்களிடம் விசாரித்து துரைராஜ் மாஸ்டரிடம் போனோம். அவரிடம் வெஸ்டர்ன் வயலின் கற்றவர்கள் எல்லோரும் இளையராஜாவிடம் வாசித்துக் கொண்டிருப்பதாக எல்லோரும் சொன்னார்கள். பாலாஜி இளையராஜாவிடம் வாசித்துக் கொண்டிருந்தாலும், நான் தனியாக இசையமைக்கும் போது, அந்த வேலையை விட்டு விட்டு என்னிடம் அசிஸ்டெண்ட்டாக வந்துவிடுவதாக சத்தியம் செய்தான்.
மகபூப்பாளையம் டிராவலா்ஸ் பங்களா ரோடில் ரயில்வே காலனி காம்ப்பௌண்ட் சுவரையொட்டி சின்ன சின்னதாக பெட்டிக் கடைகள் போலிருக்கும் ஒரு பெட்டியில் வைத்து தான் துரைராஜ் மாஸ்டா் வகுப்பெடுத்தார். எல்லா இசைக்கருவிகளையும் அங்கு வைத்து பழுது பாா்த்தும் தருவார். மதுரை யு.சி. பள்ளி ஆசிரியர். பெரிய மீசையுடன் போலீஸ்காரர் போல் பார்த்தாலே பயமாக இருக்கும் தோற்றம். நாங்கள் போன நேரம் அவர் ஒரு மேண்டலினை சரி செய்து கொண்டிருந்தார். விஷயத்தைச் சொன்னோம். தோற்றத்திற்கு சம்பந்தமில்லாதபடி மிக அன்பான மனிதர். பீஸ், எத்தனை கிளாஸ் எல்லா விபரமும் சொன்னார். ஒரு குயர் அன்ரூல்ட் நோட்டு, ஒரு ஸ்கேல், பென்சில் எல்லாம் எடுத்துக் கொண்டு, ஒரு நல்ல நாள் பார்த்து வரச் சொன்னார்.
நான் தயக்கத்துடன், “சார், நீங்க மேண்டலின் வாசிப்பீங்களா?” என்றேன். “மேண்டலின், வயலின் ரெண்டுக்கும் சுரஸ்தானங்கள் ஒண்ணு தா,” என்றபடி கையிலிருந்து மேண்டலினை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். டின் டின் டின் டின்டின் டின் டிடின் டின்டின் டின்டின்டின் என்று வாடிக்கை மறந்ததும் ஏனோவின் ப்ரீலூட். ப்ரீலூட் முடிந்ததும் நாங்கள் எதிர்பார்க்காத விதமாய் ஒரு தாளத்தை கூட மிஸ் செய்யாமல் அப்படியே பக்கத்திலிருந்த வயலினை எடுத்து,
வாடிக்கை மறந்ததும் ஏனோ
என்னை வாட்டிட ஆசை தானோ
பல கோடி மலர் அழகை
மூடி வைத்து மனதை
கொள்ளை அடிப்பதும் ஏனோ
வாடிக்கை மறந்ததும் ஏனோ…
என்று வாசித்து, அப்படியே கழுத்திடுக்கில் வைத்திருந்த வயலினை எடுக்காமலேயே, திரும்ப மேண்டலினில் இன்டா்லூட். ஏ.எம்.ராஜாவும், சுசீலாவுமே எங்களுக்காக நேரில் பாடுவது போல் இருந்த வாசிப்பு. ஒரே மனிதர் மாறி மாறி மேண்டலினிலும், வயலினிலும் வாசித்துக் காட்டிய இசை மழை. செல்போன் இல்லாத காலமானதால், மனதில் மட்டுமே மிக ஆழமாகப் பதிந்து விட்ட அற்புதக் காட்சி. நானும், பாலாஜியும் நெகிழ்ந்து போய் அவர் கால் தொட்டு வணங்கி வந்தோம். அன்றிலிருந்து இன்று வரை வாடிக்கை மறந்ததும் ஏனோ பாட்டை பல்லாயிரம் முறை கேட்டிருந்தாலும், அது குரலிசையாய் இல்லாமல் துரைராஜ் மாஸ்டரின் வயலின், மேண்டலின் இசையாக மட்டுமே எனக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறது!
ஆனால், கால ஓட்டத்தில் நான் எம்.எஸ்.வியாக மாறவும் இல்லை. பாலாஜி ராமமூர்த்தி ஆகவும் இல்லை. “ரொம்ப கஷ்டமா இருக்குடா மாப்ள” என்று ஒரே மாதத்தில் விட்டுவிட்டான். “ஈசியா பழகணும்னா புல்புல்தாரா தான் … அதுக்கு ஒரு புக் தருவாங்கே. 1, 2. 3 ல யே நோட்ஸ் போட்டுருக்கும், கிளாஸ் எதுவும் போக வேணாம். நம்மளே வீட்ல பழகிறலாம்”, என்றான் பாலாஜி. ஒரு மாலை வேளையில் பாப்லி பிரதர்ஸில் புல்புல்தாராவும், அதற்கான புத்தகமும் வாங்கி வந்தோம். இன்று ஒரு மசால் தோசை சாப்பிடும் பணத்திற்கு அன்று ஒரு புல்புல்தாரா ! நம்பர்களை பார்த்து பார்த்து தட்டி கொஞ்சிக் கொஞ்சி பேசி மதி மயக்கும், பிருந்தாவனமும் நந்தகுமாரனும் என்று 2-3 பாட்டுகளை தடவித் தடவி வாசித்துக் அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்களை டென்ஷனாக்கித் திரிந்தோம். சிறிது காலத்திலேயே வேலை நிமித்தம் எங்கெங்கோ போய்விட்டோம்.
இப்போது பெங்களூரு சென்று விட்டு, ஆம்னி பேருந்தில் மதுரை திரும்பி வந்தால், கோச்சடை வழியாக, டிராவலர்ஸ் பங்களா ரோட்டில் தான் வருகிறார்கள். ரயில்வே காலனி காம்ப்பெளண்ட் சுவரையொட்டிய துரைராஜ் மாஸ்டரின் கடை இருந்த சுவடே இல்லை. மேண்டலினிலும், வயலினிலும் மாறி மாறி அவர் வாசித்துக் காட்டிய வாடிக்கை மறந்ததும் ஏனோ மட்டுமே அந்த அதிகாலை நேரத்தில் என் காதில் ஒலிக்கும்.
சமீபத்தில் பாலாஜியின் அண்ணன் இறந்து விட, எங்கள் ஏரியாவின் அவர்களது பூர்வீக வீட்டை விற்றுவிட்டு, அம்மாவை தன்னோடு அழைத்துச் செல்ல இருப்பதாக அவனது அண்ணன் மகன் எனக்கு போன் செய்து சொன்னான். “ஒரு அட்டை பெட்டி நிறைய பழைய புக்ஸா இருக்கு.. வந்து பாருங்க… உங்களுக்கு எதாவது யூஸ் ஆனா எடுத்துக்கங்க” என்றான். “உங்க சித்தப்பாவோட புல்புல்தாரா இருக்காடா?” என்றேன் ஆசையாக.
“வாட் டு யு மீன்?“ என்றான் அந்த Gen Z குழவி !
(பின்குறிப்பு): புல்புல்தாரா என்றால் என்ன? என்று கேட்கும் ஈராயிரக் குழவிகள் யூடிப்பில் “எங்கெங்கும் உன் வண்ணம்” என்ற பாடலைப் பார்க்கவும். ‘கண்ணம்மா’ என்றொரு படம். சங்கர் கணேஷ் இசையில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய மிக அபூர்வமான இனிய பாடலுக்கு முத்துராமன் பிரமாதமாக புல்புல்தாரா வாசிப்பார். அவர் வாசிப்பதை ரசித்து, திரை முழுக்க நிறைந்த கே.ஆர்.விஜயா தன் முகத்தில் காட்டும் நவரசங்கள் உங்களுக்கு கூடுதல் போனஸ் !
– ச.சுப்பாராவ் (தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



