விஜய் பிரதமராக வேண்டும் என்று சொல்வதில் தவறில்லை: திருமாவளவன் பேட்டி

விஜய் பிரதமராக வேண்டும் என்று அவரது கட்சியினர் சொல்வதில் தவறில்லை என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொடர்ந்து ஆதரித்து வருகிறது. தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அரசு உணர்ந்து உடனடியாக நிறைவேற்ற முன் வர வேண்டும். தற்போது தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தள்ளி வைத்து இருக்கிறார்கள். போராட்டப் பிரதிநிதிகளுடன் அரசு சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன்வர வேண்டும்.

பாஜக தலைவர்கள் மீது வழக்குப்பதிவுச் செய்வதற்கு தவெக பயப்படுகிறது என்ற உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு தவெக தான் பதில் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் பெண்களை அதிகார மையத்தில் அமர வைப்பது தொடர்கிறது. ஜனநாயகத்தின் வளர்ச்சியாக தான் இதனை நான் பார்க்கிறேன். முதலமைச்சர் விஜய் பிரதமராக வர வேண்டும் என்று அவர் மீது பற்று உள்ளவர்கள் சொல்லும் கருத்து. இது விஜய்யின் கருத்து என்று ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது.

ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று தவெகவின் முன்னணி நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது. முதலமைச்சருடன் நெருக்கமாக உள்ள தவெக தலைவர்கள், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். விஜய் மற்றும் தவெக மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் இல்லை என்பது தான் என்னுடைய கருத்து. விஜய் பிரதமராக வேண்டும் என்று அவரது கட்சியினர் சொல்வதில் தவறு இல்லை. என்னை கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முதலமைச்சராக வேண்டும் என்று அவர்களது விருப்பத்தை சொல்கின்றனர்.

கூட்டணியில் இருப்பதால் சொந்தக் கட்சியினர் சொல்வது தவெகவிற்கு எதிரான நிலைப்பாடா? அது சொந்த கட்சியினரின் ஆசை மற்றும் வெளிப்பாடு. இதை தவறு என்று சொல்ல முடியாது. ஜனநாயகத்தில் யாருக்கும் எந்த விருப்பமும், நோக்கமும் இருக்கலாம். விஜய் மீது பற்று கொண்டவர்கள் சொல்லும் கருத்து கட்சியின் நிலைப்பாடு என்ற முடிவுக்கு வந்து விட முடியாது” என்று கூறினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *