
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஹசன் மவுலானா தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஹசன் மவுலானா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ல் பிரிவு 78-க்கு இணங்க, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மொத்தம் 17.03 லட்சம் ரூபாய் தேர்தலுக்காக செலவு செய்ததாக கணக்கு காட்டியுள்ளார்.
ஆனால், தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ததில் ஹசன் மவுலானா மொத்தம் 32.05 லட்சம் ரூபாய் மதிப்பிலான விளம்பர செலவுகளை மறைத்து பொய்கணக்கு காட்டியது தெரியவந்துள்ளது. கட்சி தான் அந்த செலவை ஏற்றது என்று அவரது தரப்பில் கூறப்பட்டாலும், அதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.
இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் அனைவரும் நேர்மையாக உண்மையான கணக்கை காட்ட வேண்டும். தவறான கணக்கை காட்டுவது தேர்தல் விதியை மீறும் தீவிரமான குற்றமாகும் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ஹசன் மவுலானா தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து (ஆகஸ்ட் 28) மூன்று ஆண்டுகளுக்கு அவர் எம்.பி, எம்எல்ஏ உள்ளிட்ட எந்த ஒரு பதவிக்கும் போட்டியிடவோ பதவியில் இருக்கவோ முடியாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



