
சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசில் மகளிர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் ஜெகதீஸ்வரி. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விருதுநகரில் இருந்து சென்னை நோக்கி இன்று (செப்டம்பர் 7) அதிகாலையில் அரசு வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரது குடும்பத்தினரும் அமைச்சருக்கு சொந்தமான மற்றொரு வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர்.
சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதி அருகே அமைச்சர் ஜெகதீஸ்வரியின் குடும்பத்தினர் பயணம் செய்த கார், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டூவீலரில் வந்த இறையன்பு (26) சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய அமைச்சரின் சொந்த வாகனத்தைக் கைப்பற்றி, போக்குவரத்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக அதிவேகமாக மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதாக இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே அமைச்சரின் காரை ஓட்டி வந்த சின்ன அக்னி என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



