காவல்துறை நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு கூடாது: விஜய் அறிவுறுத்தல்

காவல்துறை நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த வியாழனன்று முதலமைச்சர் விஜய் வசமுள்ள காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு பேரவைக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று (செப்டம்பர் 7) மீண்டும் கூடியது. அவை கூடியதும், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்கு முன்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், “ஒரு மாநிலத்தோட முன்னேற்றம் சாலைகள் அமைக்கப்படுவதாலோ, தொழிற்சாலை உருவாக்கப்படுவதாலோ மட்டுமல்ல; அந்த மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் பயமில்லாமல் வாழ்வதில் தான் அந்த மாநிலத்தின் முன்னேற்றம் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு ஒழுங்காக இருந்தால் வேலை வாய்ப்பு வரும், தொழில் முன்னேற்றம் வரும், பெண்களும் இளைஞர்களும் சுதந்திரமாக கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் பெறுவார்கள்.

காவல்துறையைப் பொருத்தவரை சட்டத்தைப் பின்பற்றுபவர்களுக்கு உற்ற நண்பர்களாகவும், சட்டத்தை மீறுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் இருக்க வேண்டும். ஒரு காவலருக்கு இந்த இரண்டும் மிகவும் அவசியம். காவலர்கள் அச்சமும் பயமும் இன்றி துணிச்சலோடு செயல்படுவதற்கு இந்த அரசு உதவியாக செயல்பட்டு வருகிறது. முதலமைச்சராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் எந்த ஒரு அதிகாரிகளாக இருந்தாலும், எந்த ஒரு அரசியல் அதிகாரத்திற்கும் காவல்துறை நடவடிக்கைகளில் தலையீடு இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன். குற்றவாளி யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துகிறேன்.

சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கு குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த அரசைக் குறை கூறும் வகையில் கூறியவர்களின் கருத்துக்களைக் கூட மக்களின் பாதுகாப்பு நலன் கருதி, அவர்களின் கவலையையும் இந்த அரசு எடுத்துக் கொள்கிறது. உள்நோக்கத்தோடு கூறப்படும் கருத்துகளில் கூட ஏதேனும் உண்மை உள்ளதா என்பதைப் பரிசீலித்து அதனை எடுத்துக் கொள்கிறோம்.

காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை துறை ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் இந்த அரசைப் பாராட்டியுள்ளனர்; சிலர் இந்த அரசைக் குறை சொல்லியுள்ளனர்; சிலர் ஆரோக்கியமான விவாதங்களை முன்வைத்துள்ளனர். சிலர் துறை ரீதியான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அனைத்தையும் கணக்கில் கொண்டு உரிய துறைகளுக்குக் கொண்டு செல்லப்படும் என்ற உறுதி அளிக்கிறேன்.

ஒரு குற்றம் நடைபெற்று விட்டது என்பதற்காக, ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறிவிட முடியாது. தனிப்பட்ட குற்றச் சம்பவத்துக்கும் மாநிலத்தின் ஒட்டு மொத்த சட்டம் – ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது. ஒரு குற்றம் நடைபெற்று விட்டபிறகு, அதற்கான பொறுப்பை அரசு மீது சுமத்தி, மற்றவர்கள் ஒதுங்கிவிட முடியாது.

ஏனெனில், அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாள்களில் தோன்றியதல்ல. ஒவ்வொரு குற்றத்துக்குப் பின்னாலும் ஒரு குடும்பப் பிரச்னை, சொத்துத் தகராறு, முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை, போதைப்பொருள் பயன்பாட்டின் தாக்கமாகவும் இருக்கலாம். கடந்த காலங்களில் ஏற்பட்ட சட்டத்தின் மீது பயமில்லாதது, சிலரின் ஆதிக்கத்தின்கீழ் காவல்துறையின் செயல்பாடு, போதைக் கலாசார வளர்ச்சி போன்றவையும், சமூகக் கட்டுப்பாடு குறைதல், சாதிய அடையாளம், நிலம் மற்றும் அதிகாரத்தின் மீதான போட்டி, கலப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு, உள்ளூர் அதிகாரப் போட்டி, அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கம், சமூக வலையமைப்புகளின் தாக்கம் போன்ற பல்வேறு சமூக காரணிகளும் குற்றங்களுக்குப் பின்னணியாக இருக்கலாம்.

எனவே தான், 2026 ஜூலை 30-ல் நடைபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் காவல்துறையின் பணி என்பது குற்றவாளிகளைக் கைது செய்து விடுவதோடு முடிந்துவிடக் கூடாது. குற்றம் உருவாகும் சூழலைக் கண்டறிந்து, அந்தக் குற்றம் நடைபெறுவதற்கு முன்பே தடுப்பதை காவல்துறை இலக்காகக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.

குற்றங்களுக்கு போதை கலாசாரம்தான் காரணம் என கண்டறியப்பட்டு அந்த கலாசாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவெக ஆட்சிக்கு வந்தது முதல் 4 ஆயிரம் கிலோவுக்கு மேல் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சராக பதவியேற்ற நாள் முதல் ஊழலற்ற நிர்வாகம் என்பதில் உறுதியாக உள்ளேன். இளம் வயதினர் குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்திருக்கிறது. அதனையும் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு குறித்து பேசும் எதிர்க்கட்சியினருக்கு, கடந்த 2021 – 25-ம் ஆண்டு கால குற்றங்களை பட்டியலிட்டுவிட்டுச் சென்றுவிட எனக்கு விருப்பமில்லை.

அரசியல் ரீதியாக எந்தக் கருத்துகளையும் கூறலாம். ஆனால் தனிப்பட்ட தாக்குதல்கள் பேசக் கூடாது. ஆர்த்தோ சர்ஜன் போல பேரவைக்குள்ளேயே எலும்பை உடைப்பேன் என்று ஒரு எம்எல்ஏ பேசுகிறார். இப்படிப் பேசி பேசித்தானே, இன்று அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள். மற்றொரு சட்டப்பேரவை உறுப்பினர் கூறுகிறார், திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என்று கூறுகிறார். மக்களின் தீர்ப்பை ஏற்காத நீங்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்?” என்று அவர் பேசியதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், ‘ திமுகவினருக்கு அட்வைஸ் கூற வேண்டாம்’ என்று முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து “திமுகவினருக்கு அறிவுரை கூற நான் வரவில்லை” என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *