‘கொடநாடு வாட்ச்மேன்’… விஜய்யை பின்னி எடுத்த உதயநிதி

தனது படத்திற்காக கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த இன்றைய முதலமைச்சர் விஜய் மிசா பற்றி பேசலாமா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 7) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்து பேசினார். அப்போது திமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்குப் பதிலளிக்க திமுக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாய்ப்பு கேட்டார். இதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அனுமதி மறுத்தார். இதனால் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் பேச வாய்ப்பு தரப்படும் என்ற கூறிய சபாநாயகர், திடீரென பேச அனுமதி மறுத்தார். இதனைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் பின் தலைமைச் செயலக வளாகத்தில் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,“ கடந்த வியாழக்கிழமையன்று காவல்துறை அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை விவாதத்தில், எதிர்க்கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக நான் உரையாற்றியிருந்தேன். இந்த ஆட்சியில் என்னென்ன நடந்திருக்கிறது, இந்த 114 நாட்கள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீரழிந்து போயிருக்கிறது என்பதை ஆதாரங்களோடு பேசியிருந்தேன்.அப்போது அரசுக்கு 15 கேள்விகள் வைத்திருந்தேன். குறிப்பாக முதலமைச்சரிடம் நேரடியாகக் கேள்விகள் கேட்டேன். அதற்கு இன்றைக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசினார். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசினார். அதில் முதல் 10 முதல் 15 நிமிடங்கள், காவல்துறையின் சார்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம், ஆன்லைன் ப்ராடு சம்பந்தமாக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு வந்தார். நாங்களெல்லாம் அமைதியாக உட்கார்ந்து அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தோம்.

ஆனால் 15-வது நிமிடத்திற்குப் பிறகு, எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை எங்கள் மீது வைக்க ஆரம்பித்தார். நான் வியாழக்கிழமை பேசும்போதே, ‘ இன்னும் எங்கள் மேலேயே பழி போடாமல், இந்த மூன்று மாதங்களில் என்னென்ன செய்திருக்கிறீர்கள், அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைப் பதில் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருந்தேன். ஆனால் மீண்டும் திமுக ஆட்சியே நடக்கிறது என்ற நினைப்பில் முதலமைச்சர் அவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்தார். சில கட்சிக் கூட்டங்களில் எங்களுடைய உறுப்பினர்கள் வெளியில் பேசியதையும், இந்த அரசு மீது வைத்த விமர்சனங்களையும் உள்ளே கொண்டுவந்து பேசி, அதையெல்லாம் அவைக் குறிப்பில் பதிவேற்றச் செய்ய ஆரம்பித்தார்.

முதலமைச்சர் பேசி முடித்த உடனே நாங்கள் அனைவரும் மீண்டும் எழுந்து, ‘எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். எங்களைப் பற்றிக் குற்றச்சாட்டு சொல்லியிருக்கிறார்’ என்று கேட்டோம். ஆனால் அதற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக முதலமைச்சருடைய பேச்சை முழுமையாகக் கேட்டுவிட்டு வெளிநடப்பு செய்திருக்கிறோம். நாங்கள் வைத்த ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் சொன்னாரா என்று பார்த்தால், எதுவுமே இல்லை. கடந்த வியாழக்கிழமை முதலமைச்சர் வந்து, ‘இதற்கெல்லாம் நான் திங்கட்கிழமை பதில் சொல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடிப் போய்விட்டார்.

நான்கூட, ‘ஏதாவது பிரிபேர் பண்ணிட்டு வருவார். மூன்று நாள் டைம் இருக்கு. நல்லா மனப்பாடம் பண்ணிட்டு வருவார்’ என்று நினைத்தேன். இன்றைக்கு மனப்பாடம் பண்ணிட்டு, ஒப்புவித்தல் போட்டி மாதிரி சட்டசபையில் தவறான கருத்துகளையும் பொய்யான குற்றச்சாட்டுகளையும் ஒப்புவித்திருக்கிறார். சட்டம்-ஒழுங்கு சம்பந்தமாக நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல், வெறும் பன்ஞ்ச் டயலாக் வெறும் டைவர்சன் டாக்டிஸ் தான்.

அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள், ஏன் ஒரு அமைச்சர், மாவட்டச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மீதெல்லாம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டிருந்தோம். ஆனால் அதற்கு மாறாக, ‘திமுக ஆட்சியில் இவர்கள் மீது இந்த வழக்குகள் இருந்தன’ என்று எங்கள் மீது திருப்புகிறார். நாங்கள் என்ன சொல்கிறோம்? வழக்கு இருந்தால் நீங்கள் நடத்துங்கள். நடவடிக்கை எடுங்கள். அதுதான் நாங்கள் சொல்கிறோம்.

இன்னும் சொல்லப்போனால், ஒரு அமைச்சர் ஐபில் மேட்சில் உட்கார்ந்து பொடி போட்டதெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். கிரிடிட் கார்டில் போனில் வைத்து பொடி போட்டதெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுடைய கட்சிக்காரர்களே இன்றைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார்கள். நேற்று சென்னையில் பட்டப்பகலில் இரண்டு கொலைகள் நடந்திருக்கின்றன. சிசிடிவி கேமராக்களில் எல்லாம் பதிவாகியிருக்கிறது. அதைப் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டேன். அதற்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

இதையெல்லாம் கேட்டால், இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் 1970-க்குப் போய்விட்டார் முதலமைச்சர். சர்க்காரியா கமிஷனைப் பற்றிப் பேசுகிறார். மிசாவைப் பற்றிப் பேசுகிறார். மிசாவைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு இவருக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா? சர்க்காரியா கமிஷனைப் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா? யாரோ எழுதிக் கொடுத்ததை மூன்று நாளாக மனப்பாடம் பண்ணிட்டு வந்து இங்கே வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறார். சர்க்காரியா கமிஷனில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அந்தக் கமிஷனே ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.

அதே மாதிரி மிசாவைப் பற்றி இவர் பேசுகிறார். கொடநாட்டில் போய் இவருடைய படம் ரிலீசுக்காக வாட்ச்சேன் வேலை பார்த்தவர்தான் இந்த முதலமைச்சர். இவருக்கு மிசாவைப் பற்றியும், எங்களுடைய தலைவரைப் பற்றியும் பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா? இவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. இவர் ஆட்சியைப் பிடித்தது ஒரு பெரிய விபத்து. இவருக்கு மிசாவைப் பற்றியும் சர்க்காரியா கமிஷனைப் பற்றியும் பேசுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது.

நான் இந்த அரசு மீது இப்போது ஓப்பனாக ஒரு குற்றச்சாட்டு வைக்கிறேன். முதலமைச்சருடைய நண்பர்கள், அவருடைய ஆபீஸில் இருக்கக்கூடிய அட்வைசர்ஸ், அதில் விஷ்ணு ரெட்டி. சமீபத்தில் ஒரு அமைச்சர் பேசும்போது நன்றி சொல்கிறார். விஷ்ணு ரெட்டி, அவருடைய மச்சான் சுஜய் ரெட்டி, அவருடைய பிசினஸ் பார்ட்னர் அனில் ரெட்டி இவர்கள் எல்லாம் சேர்ந்து அரசு நடத்தக்கூடிய சுரங்கத் தொழில் எல்லாவற்றையும் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இதற்கான ஒவ்வொரு ஆதாரத்தையும் நான் ஒவ்வொன்றாக வெளியிடப் போகிறேன்” என்றார் உதயநிதி ஸ்டாலின்

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *