அமைச்சர் நிர்மல் குமார் ஒரு ‘கேடி’… அன்பில் மகேஷ் பேச்சு

அமைச்சர் நிர்மல் குமார் ஒரு ‘கேடி’ என்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதை கண்டித்து திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு திமுக சார்பில் இன்று(செப்டம்பர் 12) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், ‘‘சட்டப்பேரவைக்கு வரும் தவெகவினர், ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு செல்லும் மன நிலையில் தான் வருகிறார்கள். தொடர்ந்து பொய் கூறிக்கொண்டே இருந்தால் வெற்றி பெறலாம் என்கிற கோயபல்ஸ் கோட்பாட்டின்படி தவெக அரசு செயல்படுகிறது.

கருணாநிதி மீது எந்தத் தவறும் இல்லை எனக் கூறி, முடிந்து போன சர்காரியா கமிஷன் விவகாரத்தை தற்போது விஜய் பேசுகிறார். கொடநாடுக்கு வெளியே வாட்ச்மேன் போல் நின்ற விஜய் இன்று திமுக குறித்து பேசுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கொச்சைப்படுத்துவதை போல மிசாவில் இந்தியா முழுவதும் கைதானவர்களை அமைச்சர் நிர்மல் குமார் கொச்சைப்படுத்துகிறார். அவர் ஒரு ‘கேடி’ (KD) அமைச்சர். அப்படி என்றால் ‘காக்கி டிரவுசர்’ அமைச்சர். நிர்மல் குமார் இன்னும் ஆர்எஸ்எஸ் விசுவாசியாக தான் உள்ளார்.

மிசா குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின்ர் பேசும் பொய் எல்லாம் ஆர்எஸ்எஸ்ஸின் அஜெண்டா, அதை தான் நிர்மல் குமார் பேசுகிறார். யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து தான் முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி குறித்தும், ஸ்டாலின் குறித்தும் விஜய் பேசியுள்ளார். இந்த ஆட்சி எந்த மக்களால் கொண்டு வரப்பட்டதோ அதே மக்களால் தூக்கி எறியப்படும்” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *