
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக இன்று நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் பல மாதங்களாக நடைபெற்றன. தீ விபத்தில் சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. யாகசாலை பூஜைக்காக வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்காக பிரத்யேக தங்க குடங்கள் யாக சாலையில் வைக்கப்பட்டன.பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை கலசங்களில் நிரப்பி யாகசாலையில் வைத்து தினமும் பூஜைகள் நடந்து வந்தன. 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேள்விகளை நடத்தினர்.

கடந்த 11-ம் தேதியன்று முதல்கால யாக பூஜைகள் தொடங்கிய நிலையில், மற்ற கால பூஜைகளும் நடந்து வந்தன. நேற்று அதிகாலை 3.45 மணியளவில் பத்தாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அந்த வழிபாடு நிறைவு
பெற்ற பிறகு 414 பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர், தங்க விமானங்கள், சன்னதி விமானங்கள், 12 கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கான கும்ப கலசங்களுக்கு நேற்று மாலை பதினோரம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
விழாவின் சிகரமாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் மகா கும்பாபிஷேக விழா இன்று (செப்டம்பர் 17) காலை கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக அதிகாலை 3.45 மணிக்கு 12-ம் கால யாக பூஜை நடைபெற்றது.
யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு 5.45 மணிக்கு நடைபெற்றது. அதனை சிவாச்சாரியார்கள் 4 ராஜ கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள் தங்க விமானங்களுக்கு கொண்டு சென்றபிறகு சரியாக 7.40 மணியளவில் கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஒலிக்க கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது அங்கு குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மனம் முருகி சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மாசி வீதிகளில் குவிந்துள்ள மக்கள், பக்திப் பரவசத்துடன் குடமுழுக்கை கண்டு மனம் குளிர்ந்தனர்.
கும்பாபிஷேகத்தை கோயிலின் மேல் தளத்தில் இருந்து காண 9 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து மதுரையில் குவிந்துள்ளனர். பின்பு மூலவர் மீனாட்சி அம்மனுக்கு காலை 8.10 மணிக்கும், சுந்தரேசுவரருக்கு 8.50 மணிக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேம் நடைபெற்றது.
அதன்பின்னர் அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. காலை 10 மணி முதல் இரவு வரை நடைசாத்தப்படாமல் மூலவர் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை காண முடியாத பக்தர்களுக்காக இன்றிரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி, சுந்தரேசுவரர் வீதி உலா வந்து காட்சி அளிக்க உள்ளனர்.
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.



