ஒரு கதை 31: தனக்குள் தவித்தலைதல்

மனிதர்கள் ஒரே படித்தானவர்கள் அல்ல. அவர்களுடைய நடவடிக்கைககளும்கூட ஒரே தன்மையிலானவையல்ல. விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே தன்னுடைய வீட்டைத் தாண்டி யோசிக்கிறார்கள். பொதுச்சமூகத்தின் மனிதனாக தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்கிறார்கள். சமயத்தில் அருகாமை மனிதர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானாலும் அது குறித்து கவலையற்று தன்னுடைய செயல்பாடுகளில் மட்டும் தொடர்ந்து தீவிரமாக இருப்பார்கள். இவர்களில் மத்தியதர வர்க்கத்து மனிதர்களும் உண்டு. வறுமையில் சிக்கி உழலும் கீழ் மத்தியதர வர்க்கத்து மனிதர்களும் இருப்பர்.

எப்போதும் பொதுச் சமூகத்தில் இவர்கள் வெகு குறைவான எண்ணிக்கை கொண்ட சிறுபான்மையினர் மட்டுமே. ஆனால் பெரும்பான்மையினர் இப்படி பொறுப்புடன் நடப்பதில்லை. அரசதிகாரம்கூட வேண்டாம். அடுத்த வீட்டுக்காரனின் விதிமீறலையோ அல்லது எரிச்சலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளயோகூட எதிர்கொள்ள துணிவற்றவர்களால் ஆனதே இந்த பேருலகு. தனக்கு முன்பாக நடக்கும் எல்லாவற்றையும் கண்டும் காணாமலும் போகிறவர்கள் தான் இங்கு அதிகம். எவனும் என்னமும் பன்னிட்டுப் போறான், நமக்கு எதுக்கு வம்பு என நினைப்பவர்கள் நிஜத்தில் தங்களுக்குள் ஒடுங்கிப்போகிறார்கள். பிறகு எதன்மீதும் அவர்களுக்கு விருப்பமோ அல்லது விலகலோ ஏற்படுவதில்லை. இப்படி பற்றற்று இருப்பதற்கான மனப் பயிற்சியையும் அவர்களுக்கு இந்த சமூகமே வழங்குகிறது.

இப்படி ஒரே போல வார்க்கப்பட்ட மிடில் கிளாஸ் மனிதக்கூட்டம்தான் இங்கு எல்லா பொதுக்கருத்தியல்களையும் உருவாக்குகிறது. இவர்களுடைய அக்கறைகள்,கனவுகள் யாவும் அவர்களுக்குள் துவங்கி அவர்களுக்குள்ளேயே முடிந்தும் போகும். தன்னைத் தாண்ட முடியாதவர்கள் உலகம் பற்றிப் பேசுகிற வியாக்கியானம்கூட அவர்களுக்குள் சுருங்கிப் போய்விடும். மத்தியதர வர்க்கத்து மனிதர்களின் உளவியல் கூறுகளைக் குறித்த கதைகள் தமிழில் எழுதப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. அப்படி எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளில் ஒன்று எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் எழுதிய ‘புயல்’.

எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் மதுரைக்காரர். ஒரு விதத்தில் மதுரையைப் பற்றி எழுதாத மதுரைக்காரர். உளவியல் ஆலோசகர். வாழ்வின் துக்க நொடிகளைக்கூட எள்ளலும் பகடியுமாக தன்னுடைய கதைகளில் எழுதிப் பார்த்தவர். ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ எனும் நாவல் மனதால் வதைபடுகிற மனிதர்களின் பாடுகளைப் பற்றி எழுதப்பட்ட அசாத்தியயமான நாவல். ‘டேபிள் டென்னிஸ்’ எனும் குறுநாவல் பாலியல் சிக்கல்கள் ஏற்படுத்தும் உளவியல் சிதைவுகளைப் பற்றிய கதையே. அவருடைய ஆதர்ஸ எழுத்தாளரான தாஸ்தாவெஸ்கியின் ‘இடியட்’, ‘குற்றமும் தண்டனையும்’ போன்ற நாவல்களின் வழியே உருவானவர் எழுத்தாளர் கோபி கிருஷ்ணன்.

சென்னையில் ஒரு உளவியல் ஆலோசானை மையத்தையும் நடத்தினார். தமிழில் மன உணர்வுகளை பகடியாக கடத்தும் கச்சிதமான கதைகளை எழுதியவர் கோபி மட்டுமே. வழக்கம் போல தமிழ் இலக்கிய உலகத்தினால் அசிரத்தையாகக் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட எழுத்தாளர் கோபி கிருஷ்ணன். அவருடைய சிறுகதைகளின் உலகம் மத்தியதர வர்க்கத்து மனிதர்களின் உணர்வுத் தொகுப்பே. அவசரமான நகர்ப்புற வாழ்க்கையின் நீண்ட ஓட்டத்திற்குள் பொருந்திப்போக முடியாமல் தடுமாறும் மனிதக்கூட்டத்தின் கதையே அவருடைய சிறுகதைகள். மிகச் செறிவான கச்சிதக் கதைகள் கோபி கிருஷ்ணனனுடையவை. அவருடைய சிறந்த கதைகளில் ஓன்று ‘புயல்’.

இந்த கதையின் தலைப்பு நமக்கு உணர்த்துவது போலவே ஒரு மழைநாளில்தான் துவங்குகிறது. மழைநாளில் விடாமல் நசநசவென பெய்து கொண்டிருக்கும் மழையில் ஒரு மாதச் சம்பளக்காரன் காட்சிப்படுகிறான். அப்பாடி அலுவலகம் விட்டாகிவிட்டது. இந்த நாளின் எல்லா அலுப்புகளையும் புகை ஊதி கலைக்க யோசித்தபடி பெட்டிக்கடை நோக்கிப் போகிறான். மழையில் நனைந்துவிடக்கூடாது என்பது அவனுடைய பெரும் விருப்பம். மிடில் கிளாஸ் மனிதர்களின் சிறு ஆசைகூட நிறைவேறுமா என்ன? ஆசைப்படலாம் அது ஆசைப்படி சித்திக்க சாத்தியங்கள் இருந்தால்தானே?
மழையில் இருந்து தன்னைப் பாதுகாத்திடும் தளவாடச் சாமான்கள் அவனிடம் இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால், அதற்காக இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. குடையை விரித்தாலும் மழைத்துளி தலையில் விழும்படியான குடை. இழுத்துப் போர்த்தி எந்தப் பொத்தானை மாட்டினாலும் சட்டை முழுவதும் நனைந்து போகும்படியான மழைக்கோட்டு. ஆனாலுமே அவன் மிடில் கிளாஸ் மனோபாவத்தை விட்டுத் தொலைக்காமல் தனித்த ஜம்பத்துடன் மழைக் கோட் அணிந்து குடை விரித்தபடி தெருவில் இறங்கி நடக்கிறான். கதையின் முதல்பாரா சொல்லிவிடுகிறது கதை புறவெளியை சுருட்டி எடுக்கக் காத்திருக்கும் புயலைப் பற்றியது அல்ல என்பதை.

எங்கோ சூழ்கொண்டு அலையும் மேகங்கள் வேறு எங்கோ மழையாகப் பொழிவதைப்போலத்தான் கதையும் நகர்கிறது. மழையும், புயலும் புறவெளிகளில் நிகழ்வது. கதைக்குள் எழுத்தாளர் ஏக்நாத் என்கிற குடும்பஸ்தனின் வழியாக எழுத்தாளர் கோபி நிகழ்த்திக்காட்டுவது மனித அகத்தின் துக்கங்கங்களை. ஏக்நாத்தின் மனதிற்குள் அடிக்கும் புயல் மட்டுமல்ல. இது மத்தியதர வர்க்கத்து மனிதர்களின் மனநிலைத் தொகுப்பு.

வீட்டில் காய்ச்சலில் விழுந்து கிடக்கும் குழந்தையின் முகம் நினைவிற்கு வந்தவுடன் ஏக்நாத் ஒரு சாக்லெட் வாங்குகிறான். சர்க்கரை,காப்பித்தூள் வாங்குகிறான். மனதில் வீடு விஸ்தாரமாக விரிகிறது. புகை ஊதுகிறான். அடுத்த நொடியில் ஒரு மாமி மூஞ்சைச் சுண்டுகிறாள். அவ்வளவுதான் அப்போதுதான் குடிக்க துவங்கியிருந்த சிகரெட்டைத் தூக்கி வீசுகிறான். ஏக்நாத்தைப் பொறுத்தவரை பிறருக்கு சின்ன இடைஞ்சல் கூட தன்னால் ஏற்படக்கூடாது என்று நினைக்கிறவன். இப்படித்தான் காலையில் வீட்டில் இருந்து கிளம்பும்போது தெருவையே அடைத்து போக வழியின்றி கோலம் போட்டிருந்த வீட்டுக்கார அம்மாவின் கோலத்தை அழிக்காமல் நடந்து வருவதற்குள் படாதபாடு படுகிறான். பிறரின் துக்கத்திற்கு ஒருபோதும் தான் காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதில் உறுதியானவன் ஏக்நாத்.

வீட்டிற்குள் நுழைந்த மறுநொடியில் ஏக்நாத்தின் மனைவியின் புலம்பல் துவங்கிவிடுகிறது. “ஏன் இன்னைக்கு லேட். வாங்க, வாங்க வீட்டை விட்டுக் கிளம்பிட்டாப் போதும் வீட்டு நினைப்பு சுத்தமா வாறதே இல்லை. இது ஒன்னும் இந்த வீட்டு ஆம்பிளைங்களுக்கு மட்டுமல்ல. எல்லா வீட்டு ஆம்பளைங்களும் இப்பிடித்தான்” என புலம்புகிறாள். ஏக்நாத் தினமும் நடப்பதுதானே என குழந்தைக்கு வாங்கி வந்த சாக்லெட்டைக் குடுக்கிறான். லேசாக பிய்த்து சாப்பிட்ட மறுநொடியில் குழந்தை வாந்தி எடுக்கிறது. காய்ச்சல்ல கிடக்கிற குழந்தைக்கு சாக்லெட் குடுக்கிறோமேன்னு எந்தக் கவலையும் இல்ல இந்த மனுஷனுக்கு. மனிதர்கள் எப்போதும் தன்னைச் சூழும் வலைச்சிக்கலில் இருந்து மீள வழிவகைகளை அவர்களே உருவாக்குவார்கள். அப்படித்தான் ஏக்நாத் உரையாடலை வேறு பக்கம் திருப்பி விடுகிறான். “ஆமா, நீ இன்னைக்கு வேலைக்குப் போனீல்ல அங்க என்ன ஆச்சு?” என்று கேட்கிறான். காத்திருந்த கதவு திறந்தால் போதாதா வார்த்தைகள் சடசவென வெளிவரத்தானே செய்யும் ஒவ்வொன்றாக ஏக்நாத்தின் மனைவி சொல்லத் துவங்குகிறாள்.

“மனிதர்களா இவர்கள். எவ்வளவு கீழ்த்தரமானவர்களாக இருக்கிறார்கள். ஆஸ்பத்திரியில் கம்பவுண்டர் நர்ஸ்களிடம் வெள்ளைக்காரப் பெண் ஒருத்தியின் நிர்வாணப் புகைப்படம் ஒன்றைக் காட்டுகிறான். அதைப் பார்த்த நர்ஸ்கள் என்ன செஞ்சிருக்கனும், அவனை நல்லா அடித்து துவைத்திருக்கனும், இல்லாட்டி கேவலமா திட்டியிருக்கனும். ஆனா பாருங்க நர்சுகளும் அந்த ஆளோட சேர்ந்துக்கிட்டு கெக்கே பிக்கேன்னு சிரிக்குதுங்க. எனக்கு குமட்டிக்கிட்டு வருது. நர்ஸ்கள்தான் இப்பிடின்னு பார்த்தா, இந்த டாக்டர் தன்னோட வயதைப் பற்றிக் கவலையில்ல. தனக்கு குடும்பம் பொண்டாட்டி குழந்தைகள் இருக்குது என்கிற நினைப்புகூட இல்லை. ஏதோ ஊசியைப் போட்டுக்கிட்டு சீப் நர்ஸோட குடும்பம் நடத்துறாரு. உலகத்தைத் தெரிஞ்சுக்கனும்,சமூகத்தைப் புரிஞ்சுக்கனும் அதனால வேலைக்கு போய்ப்பாருன்னு நீங்க சொன்னதாலதான் அந்த ஆஸ்பத்திரிக்கூ வேலைக்கு போனேன். ஆனா என்னைச் சுற்றி நடக்கிறது எதுவும் எனக்கு கொஞ்சமும் விளங்கல. ஏன் இப்பிடி கழிசடைககளா இருக்குதுக”.

இதைக் கேட்டவுடன் அதற்காகவே காத்திருந்தவன் போல ஏக்நாத் பேசத் துவங்குகிறான். “இப்பிடித்தான் நம்ம கண்ணு முன்னாடி நடக்கிறது எல்லாமே சரியில்லாம இருக்குங்கிறதுக்காக வீட்டுக்குள்ளயே முடங்கியா கிடக்க முடியும்னு சொன்ன மறுநொடியில் வீட்டில் கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த எரிச்சலான சம்பவங்களைக் கொட்டத் துவங்குகிறாள். வீடு வெளி என எதுவும் சரியில்லை. இங்கு எது குறித்தும் நல்லபடியாக நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எரிச்சல் மேலிட என்னடா உலகிமிது என கத்தி தீர்க்க வேண்டிய ஏக்நாத் மெல்ல முனங்குகிறன். இந்த உலகில் நீயும் நானும் பார்க்கும் யாவரும் சாக்கடையில் உழலும் பன்றிகள் என முனு முனுத்து தனக்குள்ளும் தன் குடும்பத்திற்குள்ளும் வீசிய அகப்புயலைக் கடக்க முயற்சிக்கிறான். புறவெளிகளின் புயல் என்றாவது ஓய்ந்து போகவே செய்யும்.மனதைச் சிததைக்கும் பெரும் புயல்களின் சுழற்சியில் இருந்து வெளியேற வழிவகையின்றி தவித்தலைந்தே சிக்கலுக்கு உள்ளாகிறது மத்தியதர வர்க்கத்து மனம். கோபி கிருஷ்ணனின் சிறுகதைகளின் மொழியும் கதைகூறும் முறையும் தனித்தது மட்டுமல்ல. முன் மாதிரியில்லாததும்கூட. – ம.மணிமாறன் ( தொடரும்)

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *