தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் விஜய் தொடங்கி வைத்தார்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரையில் நடந்த விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தவெக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது.இந்த திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிலையில், தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் இன்று (செப்டம்பர் 28) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்டத்தில் பிறந்த 25 குழந்தைகளுக்கு முதலமைச்சர் விஜய் தங்க மோதிரங்களை அணிவித்தார். விழாவில் பல குழந்தைகள் மற்றும் தாய்மார்களுடன் முதலமைச்சர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டிற்குச் சென்ற முதலமைச்சர், பத்து குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்தார். அத்துடன் சில குழந்தைகளுக்கு விஜய் பெயர் வைத்தார். விஜய்யை பார்ப்பதற்காக அரசு மருத்துவமனை மட்டுமின்றி கோரிப்பாளையம் பகுதியில் ஏராளமான கட்சியினர், ரசிகர்கள் குவிந்தனர். இதில் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த ஆண்கள், பெண்கள், சிறுமிகள் என பத்து பேர் மயக்கமடைந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், மயக்கமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாகப் இந்த விழாவில் பேசிய அமைச்சர் அருண் ராஜ், “ தாய் மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் தங்கத்துக்கு அரசே உத்தரவாதம். முதற்கட்டமாக 1 லட்சத்து 28 ஆயிரத்து 499 மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பிரசவமாகி வீடு திரும்பும் போதே மோதிரங்கள் வழங்கப்படும். சித்திரைத் திருழாவில் தங்கைக்காக அண்ணன் சீர் சுமந்து வரும் பாசப் பூமியில் தாய்மாமன் தங்க மோதிரம் பாசத்திட்டம் தொடங்கப்படுவது பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் தான் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்” என்று கூறினார். இந்த விழாவில் அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *