தனியார் வசமாகும் பாதாளச்சாக்கடை திட்டம்: மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி கண்டனம்

மதுரை மாநகராட்சி பாதாளச்சாக்கடை திட்டத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக்கூடாது என்று சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மதுரை மாநகராட்சி பாதாளச்சாக்கடை திட்டத்தை அரசு தனியார் பங்களிப்பு என்ற பெயரில் முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ள நடவடிக்கைக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கெனவே தூய்மைப் பணியைத் தனியாருக்குக் கொடுத்ததன் மூலம், கோயில் நகரமான நமது மதுரை இன்று குப்பை நகரமாக மாறியுள்ளது. நாளொன்றுக்கு ஆயிரம் டன் குப்பைகளை அகற்ற வேண்டிய தனியார் நிறுவனம் குப்பைக்குப் பதில் மண்ணை அள்ளிப்போட்டு லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் புகார் அளித்தும், போராட்டம் நடத்தியும் கூட கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. குப்பைகளை அகற்றுவதிலேயே முழுத்தோல்வி அடைந்துள்ள தனியார் நிறுவனங்களிடம் இப்போது பாதாளச்சாக்கடை திட்டத்தையும் ஒப்படைத்தால், நகரம் முழுவதும் நாறிப்போகும். இதைத்தான் தமிழக அரசு எதிர்பார்க்கிறதா? எனவே இந்த முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *