ஒரு கதை 36: மனம் பூக்கும் பொழுது…

பார்க்கும் மணித்துளியில் பளிச்சென தென்படும் எதன்மீதும் மனிதர்களுக்கு இடையே நிச்சயமாக பெரிய பேதமோ, விலகலோ இல்லை. பார்த்தனவற்றை இந்த உலகம் அதுவரையிலும் எப்படி புரிந்து வைத்திருக்கிறதோ அந்த வழிவகையில் நின்று புரிந்து கொள்வது மனிதர்களுக்கு லகுவாக இருக்கிறது. சின்ன சின்ன மாற்றங்களைக் கூட ஏற்பதில் பெரிய மனத்தடையுடனே பொதுமைச்சமூகம் இன்றுவரையிலும் இயக்கம் கொள்கிறது. மாற்றத்தைப் புரிந்துகொண்டு ஏற்கும் மனநிலை நோக்கி பொதுச்சமூகத்தை உந்தித் தள்ளுவதற்கு பெரும் பண்பாட்டு நடவடிக்கைகள் தேவையாக இருக்கிறது. இது சாப்பிடுவதற்காக முன்வைக்கப்படும் உணவுப் பொருட்களில் துவங்கி , நித்தமும் பயன்படுத்தும் பொருட்களின் மீதும்கூட இப்படித்தான் மனிதர்களின் சிந்தனைகளும், யோசனைகளும் இருக்கின்றன.

இந்த சமூக உளவியல்கூறு குழந்தைப் பேற்றின் போதும்கூட அப்படியேதான் இருக்கிறது. பிரசவ நாளின் போதான கேள்விகளும் அதற்கான பதில்களும் அது கட்டமைக்கும் உரையாடல்களும் சுற்றிச் சுற்றி வருவது பிறந்த சிசுவின் பாலியல் அடையாளத்தினைப் பற்றியே. ஆண் குழந்தை என்றால் மனப்பெருமிதமும், பெண் சிசுவெனில் ஏதோ பெரும் குறை குடும்பத்தைச் சூழ்ந்திருப்பது போலான மனநிலையும் இன்றுவரையிலும் தமிழ்க்குடும்பங்களில் இருக்கிறது.

இதற்கு வரலாற்று ரீதியான மனித சமூக வளர்ச்சியின் வரலாற்றை மட்டுமல்ல அது எப்படி பாலியல் பாகுபாட்டுடன் வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும். ஆண் பெண் பாலின பேதமே தடுமாறித் தத்தளிக்கும் தமிழ்நிலத்தில் மூன்றாவது பாலினம் குறித்த பார்வையும் புரிதலும் எப்படி எப்படியெல்லாம் இருந்திருக்கும், இன்றுவரையிலும் அதன் புரிதல் பயணம் எந்தப் புள்ளியில் வந்து நிற்கிறது என்பது சமகாலத்தில் விவாதிக்க வேண்டிய கலாச்சார பேசுபொருள். இப்போது பேச வேண்டியது மூன்றாம் பாலினம் குறித்தான பேசுபொருள் என்றால் இதற்கு முன்பாக பேசியே இருக்காத விஷயம் இதுவென யாரும் தவறாக புரிந்து கொள்ளமாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன். மாலிக்காபூர் எனும் படைத்தளபதி துவங்கி சிகன்டி எனும் புராண கதாபாத்திரங்கள் வரையிலும் அங்கொன்றும்,இங்கொன்றுமாக முன்றாம் பாலினம் குறித்த உரையாடல்கள் இங்கு நடக்கவே செய்திருக்கிறது.

ஆனாலும், அந்த உரையாடல்கள் போதுமானதில்லை. அதிலும் மூன்றாம் பாலினம் எனும் சொற்றொடர் இன்றைக்கு திருநர் எனும் சொற்பதத்தை வந்தடைந்திருக்கிறது. இந்தப் புள்ளியை வந்தடைந்திருப்பது ஒன்றும் எளிதான பயணமில்லை. அவமானம் புறக்கணிப்பு பலியிடல் என இதன் வரலாற்றைப் பேசப் புகுந்தால் அது உடல் அரசியல் எனும் தனித்த விவாதப்பொருளின் புதிய கதவுகளைத் திறக்கும். மானுடவியல் ஆய்வாளர்கள் ஆய்விற்கான கச்சாப் பொருளாக இலக்கியத்தையும் எடுத்துக்கொள்ளும் வழக்கம் போஸ்ட் ட்ரூத் காலத்தில் சாத்தியமாகியிருக்கிறது. பொதுவெளிகளில் கேலியும் கிண்டலும் அவமரியாதையாகவும் நடத்தப்பட்ட திருநர் சமூகம் பற்றி எழுதப்பட்டிருக்கும் சிறுகதைகள் தமிழில் நிறையவே இருக்கிறது. கி.ரா துவங்கி இரா. நடராஜன் வரை பலரும் எழுதியிருக்ககிறார்கள். இப்போது ஆயிஷா நடராஜனாக அறியப்படும் இரா. நடராஜனின் அபூர்வமான கதை ‘மதி எனும் மனிதனின் மரணம் குறித்து’ எனும் கதை.

தமிழில் எழுதப்பட்டிருக்கும் ஆகச்சிறந்த திருநங்கை உளவியல் கதை. கி.ராவின் கோமதியையும் சேர்த்து இதுவரையிலும் எழுதப்பட்டிருக்கும் திருநர் சமூகம் பற்றிய கதைகள் யாவும் தன் உடலில் ஏற்பட்டிருக்கும் பாலியல் ரீதியிலான மாற்றங்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறும் திருநங்கையின் மன உணர்வுகளையே எழுத்தாக்கியிருக்கிறது. திருநர் சமூகம் பற்றி எழுதப்பட்டிருக்கும் சிறுகதைகளில் மிக மிக தனித்த கதை ‘கொக்குமுடி.’ எழுத்தாளர் ரம்யா அருண் ராயன் சமீபத்தில் எழுதியிருக்கும் தேர்ந்த சிறுகதை‘கொக்குமுடி’.

ரம்யா அருண் ராயன்

எழுத்தாளர் ரம்யா அருண் ராயன் அரசுப்பள்ளி ஒன்றில் அறிவியல் ஆசிரியர். இரண்டாயிரத்து இருபதில் இலக்கியம் எழுத வந்தவர். துவக்கத்தில் கவிதைகளையும், பிறகான நாட்களில் கதைகளையும் எழுதிக் கொண்டிருப்பவர். அவருடைய கதையுலகம் அவருடைய பிறப்பிடமான தூத்துக்குடி துறைமுகத்திற்கு அருகாமையில் இருக்கும் கடலோரத்து குறுநகரான வீரபாண்டியன் பட்டணத்தின் குறுமணலில் விளைந்தவையே. கடற்கரை நகர வாழ்வினை, கடலோடிகளின் பண்பாட்டினை பலரும் கதைகளாக்கியிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் பலரின் பார்வை எல்லைக்குள் தட்டுப்பட்டிருக்காத பரதவர்களின் வாழ்க்கைப்பாடுகளை நுட்பமாக பதிவு செய்திருப்பவர் எழுத்தாளர் ரம்யா அருண் ராயன்.

கிறிஸ்தவ பின்புலத்தில் காலூன்றி நின்று தன்னுடைய கதாபாத்திரங்களின் வழியாக பரதவர்களின் கலாச்ச்சார பண்பாட்டு வாழ்வினை கதைகளாக்கிக் கொண்டிருப்பவர் ரம்யா அருண் ராயன். அவருடைய ட்ரெமோலா எனும் புதிய சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் தனித்த சிறுகதையே ‘கொக்குமுடி’. இதுவரையிலும் எழுதப்பட்டிருந்த திருநர் வாழ்க்கை குறித்த சிறுகதைகள் பலவும் ஆணாகப் பிறக்க நேர்ந்திட்ட ஒருவன் இந்த ஆண் மையச் சமூகத்தில் பெண்ணாக தன்னை உணர்ந்த பொழுதினை அவனே எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுவதையும், குடும்பமும் உற்றார் உறவும் அந்த எளிய மனித உயிரின்மீது நிகழ்த்திய அவமானத்தையும், புறக்கணிப்பையுமே கதைகளாக்கியிருக்கிறார்கள். அந்த மனிதனோ அல்லது மனுஷியோ காதல் வயப்படச் சாத்தியமில்லையா எனும் எளிய கேள்வியில் விளைந்ததே எழுத்தாளர் ரம்யாவின் கொக்குமுடி. திருநர் சமூகத்தின் தனித்த காதல்கதை ‘கொக்குமுடி’.

எல்லாத் திருநர் கதைகளையும் போலத்தான் கொக்குமுடி கதையும் துவங்குகிறது. ஒரு லாரி டிரைவரை கைகாட்டி நிறுத்துகிறாள் திருநங்கை ஒருத்தி. லாரி டிரைவர் சட்டென பிச்சைக்காக கையேந்துகிறாள் என சட்டைப் பையை காசுக்காக துழாவுகிறான். ஆனால் அவள் அதற்காக வந்தவளில்லை. கதையின் முதல் பத்தியிலேயே இந்த பொதுமைச் சமூகத்தின் கோரப்பற்களை வாசகனுக்கு உணர்த்திவிடுகிறார் எழுத்தாளர். ஆனால், கதையில் நடப்பதோ வேறு. “வண்டி எவ்வளவு தூரம் போகுது. திருவிழாக் காலம். அதனால பஸ்சுல கூட்டம் சாஸ்தியா இருக்கும். என்னைய போற பாதையில இறக்கிவிட்டாப் போதும், நான் ராம்நாடுவரை போகனும்.”.டிரைவர் அசூசசையாகத்தான் பார்க்கிறான். மனம் முழுக்க பெரும் பாரத்தை சுமந்தலைகிறவன் அவன் என்பதை பார்வையே காட்டுகிறது. என்ன நினைத்தானோ “சரி ஏறிக்கொள்” என்கிறான்.

லாரியில் ஏறிய பிறகும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. டிரைவர் அவளைக் கவனிக்கிறான். சரியான அழுத்தக்காரியா இருப்பா போலயே. அது என்ன கையில பையி. அத நெஞ்சோட சேர்த்து வைச்சிருக்கா எனும் யோசனை அவனுக்குள் ஊடாடுகிறது. பயணத்திற்கு நடுவில் தன்னைக் கடந்து போகும் தேவாலாயத்தைப் பார்த்து வணங்குகிறாள் அவள். “சரி சரி ஏம்மா நீயி வேதக்காரவுகளா?”. மனிதர்களுக்கு எப்போதுமே இருக்கும் அடுத்தவர்களின் அந்தரங்களுக்குள் நுழைந்து எட்டிப்பார்த்து தெரிந்துகொள்ளும் வேட்கையின் வெளிப்பாடுதான் இது. திருநங்கை எதுவும் சொல்லவில்லை. வார்த்தைத் தூண்டில்களுக்குள் சிக்காது தப்பிக்கும் ஆற்றலை மனிதர்கள் எவ்வளவு அழுத்தக்காரர்களாக இருந்தாலும் கற்றுத்தேறவே முடியாது. அதன்பிறகு அவளின் கதையை அவளே சொல்லத் துவங்குகிறாள்.

“என் பெயர் மஞ்சு. பத்தாவது படிக்கும்போதே எனக்குத் தெரிஞ்சு போச்சு. ஆண் உடலுக்குள்ள இருக்கிற பொண்ணு நானுன்னு. எத்தனை நாளைக்கு நிஜத்தை மறைச்சு வைக்க முடியும். வீட்டுக்குத் தெரிஞ்சு ஊருக்குத் தெரிஞ்சு எல்லா அவமானங்களையும் பட்டாச்சு. பிளஸ் டூ ரிசல்ட் வர்ற வரைக்கும் தாக்குப் பிடிச்சேன். பிறகு ஓடிவந்து இப்ப திருநங்கைகளா சேர்ந்து நடத்துகிற கரகாட்டக் குழுவில் சேர்ந்திட்டேன். இந்த ஆட்டமும் ஓட்டமும் துவங்கி நடந்து இருபது வருசம் முடிஞ்சு போச்சு. இப்பக்கூட எங்க குழுவுக்கு கொக்குமுடி வாங்கத்தான் திருச்செந்தூர் வந்தேன்” என தன் கடந்தகாலத்தின் சிறுபக்கத்தை திறந்து வைக்கிறாள் மஞ்சு. “அப்பிடியா கரகாட்டம்லாம் ஆடுவியா. ஆமா ஆடுறத தவிர மத்த எதுவும் செய்யமாட்டியா” என்கிறான். அப்போது மஞ்சு எதுவும் சொல்லவில்லை. மற்றது எதுவும் எனும் சொல்லுக்கு அர்த்தம் தெரியாமலா இத்தனை நாளையும் ஒரு திருநராக கடத்தியிருப்பாள்.

அப்போது வெளிப்பட்ட அவளின் கசப்பான பார்வையை ஏதிர்கொள்ள முடியாமல் தடுமாறிப்போனான் டிரைவர். சட்டென சூழல் சிக்கலாகும்போது அதிலிருந்து தப்பித்து வெளியேறும் தந்திரம் கற்றவன்தானே மனிதன். “அதுசரி கொக்குமுடின்னு சொன்னியே, என்னது அது? .” ‘‘கரகச்செம்பு மேல புசு புசுன்னு வெள்ளையா சூரியக்கதிர்கள் விரிஞ்ச மாதிரி பிரகாசிக்கும்ல அதுதான் கொகக்குமுடி” “ஏன் அது ராம்நாட்ல கிடைக்காதா?’’. ”கிடைக்கும்,இங்கன்னா விலை குறைவு. ஒரு கொக்கு உடல்ல இருந்து ஒரு தூவல்தான் கிடைக்கும். நரிக்குறவர்கள்ட்ட சொல்லி வைச்சு கொக்குத்தூவல்கள சேகரிச்சு லோக்கல் டெய்லர்கள்ட்ட குடுத்து கொக்குமுடி தைச்சிப்போம். “. ஒரு கொகக்குமுடி தயாரிக்க பத்தாயிரத்திற்கும் மேல செலவாகிப் போகும்.”..நடக்கும் உரையாடல்கள் மட்டுமே மனங்ககளை லகுவாக்கும் வல்லமை கொண்டவை. துவக்கத்தில் இருவருக்கும் இருந்த இறுக்கம் மெதுவாக கரைகிறது.

“மஞ்சுன்னு பெயரு வைச்சிருக்கியே. உனக்கு மஞ்சள் கலர் ரொம்ப புடிக்குமா?. “. கசந்த புன்னகை மஞ்சுவின் உதட்டில் வழிந்திட,‘‘ மஞ்சு என் பள்ளித் தோழியோட பெயர்’’ என்கிறாள். டிரைவருக்குள் கிடந்த ஆண் விழித்துக் கொள்கிறான். “என்ன சொல்ற? உங்களுக்கெல்லாம் ஆம்பளைகத்தானே பிடிக்கும், பொண்ணு பேர ஞாபகமா வைச்சிருக்க ’’ எனப் பதறுகிறான். இது அவனுடைய பதட்டமல்ல பொதுச்சமூகத்தின் பதட்டம். கொக்குமுடி கதையை வழக்கமான திருநர் கதைகளில் இருந்து தனித்துக் காட்டிடும் இடம் இதுதான். அப்போது ஆணாக மஞ்சு இருந்து பெண்ணாக உணர்ந்து கோத்தி நிர்வாணம் எனப் படிப்படியாக வளர்ந்த தன்னுடைய வாழ்நாளின் பக்கங்களைத் துளித்துளியாக திறந்து வைக்கிறாள்.

என்னுடைய பள்ளித்தோழி மஞ்சுளா. சின்ன வயதில் இருந்தே நாங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்தோம். பருவ வயதைத் தொட்டபோது அவளுக்கு என்மீது பிரியமும் நேசமும் பெருகத் துவங்கியதை நானும்கூட புரிந்துதான் வைத்திருந்தேன். என்ன செய்வது. நான் அவள் காதலை ஏற்க ஆண் இல்லையே. எனக்குள் இருந்து பொங்கிப் பிரவாகிக்கும் பெண்மையை நான் அவளின் வழியாகத்தான் உணரத் துவங்கினேன் என்பதை அவளிடமே சொன்னபோது அவள் தடுமாறிப்போனாள். அவளுக்கு மட்டுமே தெரிந்த என் உடல்சார் ரகசியத்தை அவள் தனக்குள்ளேயே பொத்தி வைத்துக்கொண்டாள். அழுது கரைந்த அந்தக் கொடூரமான நாளுக்குப்பிறகு மஞ்சுளா என்னை நேருக்கு நேர் கண்கொண்டு பாக்கவேயில்லை.

காதலை தன் நேசத்திற்குரியவர்களிடம் பகிர்ந்து கொள்ள வார்த்தைகள் மட்டும்தானா இருக்கிறது. அவளுக்கு என்மீதான அன்பும் பிரியமும் ஒருதுளிகூட குறையவேயில்லை என்பதை தன்னுடைய செயல்களால் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தாள். பள்ளிக்கூட வகுப்பறையில் நான் அமர்ந்திருந்த இடத்தில் போய் உட்கார்ந்துவிட்டு பத்து நிமிடம் கழித்து எழுந்து போவதை தினசரி வழக்கமாகவே வவைத்திருந்தாள். அதனை அவளுடைய தோழிகள் எனக்குச் சொல்வார்கள். நானும் அதனைக் கவனிக்கவே செய்தேன், நடந்து இருபது வருசமாச்சு. அதன்பிறகு அவளை நான் பார்க்கவேயில்லை. எனக்குத் தெரியும். எனக்குள் இருந்த ஆண் மனதை இப்போதும்கூட காதலித்தபடிதான் மஞ்சுளா இருப்பாள். எனவேதான் அவளுடைய பெயரையே எனக்கு மஞ்சு என வைத்துக்கொண்டேன். இந்த காதல்கதை திருநர் வாழ்வினில் இதுவரையிலும் எழுதப்பட்டிருக்காத தனிக்கதை.

சட்டென அந்த டிரைவருக்குள் மறைந்து கிடந்த அவன் வாழ்வின் பக்கமும் மிக மிக லகுவாக திறந்துககொள்கிறது. உன் பேச்சு என்னை என்னுடைய மனைவியிடம் கொண்டுபோய் சேர்த்துவிட்டது. இப்படித்தான் அவளும் பேசுவாள். அவள் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இப்போது அவள் இல்லை. இல்லையென்றால் உயிருடன் இல்லை என நினைத்து விடாதே. இப்போது அவள் என்னுடன் இல்லை. என்னுடைய நண்பனுடன் ஓடிப்போய்விட்டாள். அவள் மீதான பெரும் விருப்பத்தினைக் கடக்க முடியாமல் தடுமாறிப்போனேன். எல்லா கீழான பழக்க வழக்கங்களுக்குள்ளும் சிக்கிக்கொண்டேன். இப்படி ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தவன் அடுத்த நொடியில் “ சரி. சரி இரு எனக்கு அவசரம் முட்டுது பிஷ் அடிச்சுட்டு வந்துருதேன்னு” இறங்கிப் போனவன் . கொஞ்சாதூரம் போயி வந்தபிறகு வண்டியில ஏறல. “ஆமா நீயும் வண்டிக்குள்ள ஏறி ரொம்ப நேரமாச்சே, நீயும் போய்ட்டு வந்துரு. நான் ஒன்னு நீ போறத பார்க்க மாட்டேன்” என்கிறான். சட்டென மஞ்சுவிற்கு வந்த கோபம் அவனை எரித்துவிடும் போல பாய்கிறது. “ஆமா, நான் கேட்கிறேன். யார் சார் உங்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது. என்னோட உடலின் ரகசியத்தை தெரிஞ்சுக்கிற உங்க ஆசைய நினைச்சு உங்களுக்கே வெட்கமாயில்லயா?” எனத் திட்டியபடியே இறங்கிப்போகிறாள் மஞ்சு.

கால்போன பாதையில் நடந்து போகிறாள். எல்லாம் முடிந்து திரும்பி வருகிறாள். டிரைவர் சீட்டில் டிரைவர் இல்லை. அதுவரையிலும் மஞ்சு உட்கார்ந்திருந்த சீட்டில் உட்கார்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறான். கையில் அவளுடைய பையை அலுத்திப் பிடித்திருக்கிறான். அதற்குள் இருந்த கொக்குமுடி மஞ்சுவைப் பார்த்து சிரிக்கிறது. கதை எழுத்தில் இங்கு முடிந்து போகிறது. நிஜத்தில் இனிமேல்தான் கதையை வாசித்துக் கொண்டிருக்கும் வாசக மனதினில் அது நிகழப்போகிறது. காதலை வார்த்தைகளால் மட்டும் சொல்ல வேண்டுமா என்ன?. செயல்களாலும்தான் நிகழ்த்திக்காட்ட முடியும்.
–ம.மணிமாறன் ( தொடரும்)

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *