உருவமறியா இசைவெளி II- திகில் சினிமாவின் பிதாமகன் எஸ்.பாலச்சந்தர்

இந்திய சுதந்திரமடைந்த 1947-ம் ஆண்டு ஹாலிவுட்டில் ஒரு த்ரில் திரைப்படம் வெளியானது. அந்த படத்தின் பெயர் ‘டார்க் பேசேஜ்’. அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான டேவிட் லோப் கூடிஸ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு டெல்மர் டேவ்ஸ் எழுதி இயக்கிய படம் தான் ‘டார்க் பேசேஜ்’. ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஹம்ப்ரி போகர்ட்டும் அவரது மனைவியான லாரன் பேகாலும் இணைந்து நடித்த வித்தியாசமான படமிது.

‘டார்க் பேசேஜ்’ படத்தின் கதை என்பது, கொலைக்குற்றவாளியாகத் தண்டனை பெற்ற போகார்ட் சிறையிலிருந்து தப்பித்து, தனது நிரபராதித் தன்மையை நிரூபிக்கப் போராடுகிறார். போலீஸாரிடம் சிக்காமல் இருக்க அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்; அந்தச் சிகிச்சை முடியும் வரை அவரது புகழ்பெற்ற குரல் மட்டுமே கேட்கிறது. மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகே அவரது முகம் முதன்முறையாகத் திரையில் காட்டப்படுகிறது. என்ன இது, 1993-ம் ஆண்டு சுரேஷ் மேனன் இயக்கி நடித்த ‘புதிய முகம்’ படத்தின் கதை போல இருக்கிறதா?

‘டார்க் பேசேஜ்’ படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி.

ஹாலிவுட்டில் பிளாஸ்டிக் சர்ஜரியால் முகத்தை மாற்றிக் கொண்ட படம் 1947-ல் எடுத்தது போல, தமிழிலும் முகமாற்று சிகிச்சை என்ற கதைக்களம் ‘புதிய முகம்’ படத்திற்கு முன்பே உருவானது என்பதை மறக்கக்கூடாது.1965-ம் ஆண்டு பி.புல்லையா இயக்கத்தில் எம்.ஜி.ஆர்,சரோஜாதேவி நடிப்பில் வெளியான ‘ஆசைமுகம்’ படத்திலும் முகம் மாற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவம் குறித்து பேசப்பட்டிருக்கும். இப்படியான கதைகளுக்கு ‘டார்க் பேசேஜ்’ கதை அடிப்படை ஊற்று.

ஆனால், ‘டார்க் பேசேஜ்’ கதையைத் தழுவி 1951-ம் ஆண்டு ஜூபிடர் பிக்சர்ஸ் எடுத்த ஒரு படம் பரபரப்பான திருப்பங்களுடன் வெளியாக பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எம். சோமசுந்தரம், தனது நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கித்தருமாறு வீணை எஸ்.பாலச்சந்தரை அணுகியுள்ளார். அப்போது, தவறாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டஒருவர், தன் மீதான பழியைத் துடைக்க சிறையில் இருந்து தப்பிப்பதை மையமாகக் கொண்ட ‘டார்க் பேசேஜ்’ கதையை அடிப்படையாகக் கொண்டு வீணை எஸ்.பாலச்சந்தர் ஒரு கதையை உருவாக்கினார். அப்படத்திற்கான திரைக்கதையும் அவரே எழுதினார்.

வீணை எஸ்.பாலச்சந்தர்

இந்த படத்திற்கு டி.எஸ்.வெங்கடசாமி, கலைமணி மற்றும் ஜாவர் சீதாராமன் என்ற என்.சீதாராமன் ஆகியோர் வசனங்களை எழுதினர். இப்படத்தின் படத்தொகுப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரின் சகோதரர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் எம்.ஏ.திருமுகம். இப்படத்திற்கு முதலில் ‘ரத்தம்’ என்று தான் பெயர் வைக்கப்பட்டது. இந்த தலைப்பில் ஜூபிடரின் ‘ரத்தம்’ என்ற பெரிய எழுத்துகளில் சுவரொட்டிகள் தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டது. எங்கு பார்த்தாலும் ஜூபிடரின் ‘ரத்தம்’ என்ற பேச்சு பரவியது. இது படத்தின் இயக்குநர் எஸ்.பாலச்சந்தர், தயாரிப்பாளர் சோமசுந்தரம் மற்றும் ஜூபிடர் நிறுவனத்தின் இணை நிறுவனர் எஸ். கே. மொஹிதீன் ஆகியோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் படத்தின் பெயரை மாற்ற முடிவானது. எஸ்.பாலச்சந்தர் பரிந்துரைத்த ‘கைதி’ என்ற பெயர் ஏற்றுக் கொள்ளப்பட்டு படத்திற்கு தலைப்பு மாற்றப்பட்டது.

இந்த படத்திற்கு இசை அமைத்ததுடன் முக்கிய வேடத்தில் எஸ்.பாலச்சந்தர் நடித்தார். அவருடன் எஸ்.ஏ.நடராஜன், எஸ்.ரேவதி, வி.மீனாட்சி ஆகியோரும் நடித்தனர். 1951-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி வெளியான இந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

கருணாகரன் என்ற தயாளகுணம் கொண்டவர், கிண்டி பந்தய மைதானத்தில் வேலையில்லா பட்டதாரியான விஜயனை சந்திக்கிறார். அப்போது அவர் பணம் சம்பாதிக்க உதவும் வகையில் ஒரு பந்தயத் தகவலைத் தெரிவிக்கிறார். இந்த பந்தயத்தில் வெற்றியடைகிறார் விஜயன். இதனால் கிடைத்த பந்தயப் பணத்தை கருணாகரனிடம் ஒப்படைக்கச் செல்கிறார். அப்போது கருணாகரன் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அந்த கொலைப்பழி விஜயன் மீது விழுகிறது. இதனால் கைது செய்யப்படும் விஜயனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. இதனால் சிறையில் இருந்து தப்பித்து உண்மைக் கொலைகாரனை விஜயன் கண்டுபிடிப்பதே படத்தின் கதை. இதில் விஜயனாக எஸ்.பாலச்சந்தர், கருணாகரனாக எம்.ஆர்.சந்தானம். கொலையாளி விஜயசாரதியாக எஸ்.ஏ.நடராஜன் நடித்தனர்.

புதுமை விரும்பியான வீணை எஸ்.பாலச்சந்தர் இசையமைத்த இந்த படத்தின் பாடல்களை கே.டி.சந்தானம் எழுதினார். ‘சாண்டர்ஸ் ஆஃப் தி ரிவர்’ என்ற திரைப்படத்தில் பால் ரோப்சன் பாடிய பாடலை தழுவி ‘ஐயா ஹோரி ராம்’ என்ற பாடல் உருவாக்கப்பட்டது. ‘பி ஹேப்பி, பி ஜாலி, பி ஜியர்புஃல்’ என்ற ஆங்கில வரிகளைக் கொண்ட இந்த பாடல் பிரபலமடைந்தது. ஜிக்கி பாடிய ‘ மின்னலைப் போல என் காதல் வானில் விஜயன் ஒரு நாள் வந்தார்’ என்ற பாடல் சோககீதம் கேட்போரை உருக வைத்தது. பானையின் தாளத்திற்கேற்ப பாடப்பட்ட இந்த பாடலைக் கேட்டவுடன், ‘தஞ்சாவூரு மண்ணை’ எடுத்து பாடல் தான் ஞாபகத்திற்கு வரும். தமிழ் சினிமாவில் க்ரைம் திரில்லர் படங்கள் அதிகம் வெளியாகாத 1951-ம் ஆண்டு ‘ரத்தம்’ என்ற பெயரில் உருவாகி ‘கைதி’ என்ற பெயரில் வெளியான வீணை எஸ்.பாலச்சந்தரின் முத்திரை பதித்த இந்த படத்தின் எந்த பிரிண்ட்டும் தற்போது இல்லை. இதனால் தொலைந்து போன படப்பட்டியலில் இப்படிப்பட்ட அற்புதமான படம் சேர்ந்தது மிகப்பெரிய சோகம்.
– ப.கவிதா குமார் ( தொடரும்)

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *