உருவமறியா இசைவெளி II- அதிரூபனும், எம்.ஜி.ஆரும்!

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் கமல்ஹாசன் நடித்த ‘சூரசம்ஹாரம்’ திரைப்படம் ஒளிபரப்பாகி விடுகிறது. 1988-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் மைதிலி என்ற பெயரில் நடிகை நிரோஷா நடித்தார். இந்த படத்தின் இயக்குநர் பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன். எழுத்தாளர் ஜெயகாந்தன் நடத்திய ‘தாயின் மணிக்கொடி’ பத்திரிகையில் பணியாற்றியவர். இதன் பின் சில பத்திரிகைககளில் வேலை செய்தவர், ‘திரைக்கதிர்’ என்ற சினிமா பத்திரிகையை திறம்பட நடத்தியவர். சினிமாவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய சித்ரா லட்சுமணன், பாரதிராஜாவின் மாணவர்களில் ஒருவர். அத்துடன் பிலிம்ஃபேர் விருது பெற்ற ‘மண்வாசனை’ படத்தின் தயாரிப்பாளர்.

அதி வீரபாண்டியன்
‘சூரசம்ஹாரம்’ அவர் இயக்கிய முதல் படம். இந்த படத்தில் காவல் அதிகாரி (ஏசிபி) அதி வீரபாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்தார். எனக்கு என்ன ஆச்சரியமென்றால், கமல்ஹாசனின் கேரக்டர் பெயர் தான். ஏனெனில், இதன் பின் சித்ரா லட்சுமணன் இயக்கிய ‘பெரியதம்பி’ படத்தில் பிரபுக்கு சிவா என்றும், ‘சின்னராஜா’ படத்தில் கார்த்திக்கிற்கு ராஜா, திலீப் என்ற பெயர் வைத்தவர் கமல்ஹாசனுக்கு அதி வீரபாண்டியன் என்று ஏன் பெயர் வைத்தார் என்பது தான். ஏனெனில், அதுவரை கலர் படக்காலங்களில் யாரும் கதாநாயகனுக்கு அந்த பெயரை வைக்கவில்லை.

அதிரூப அமராவதி
1988-ம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் படத்தில் கதாநாயகன் பெயர் இப்படி வைத்தார் என்ற கேள்வி இதுவரை எனக்கு உள்ளது. அதி என்றவுடன் எனக்கு எம்.ஜி.ஆர் தான் நினைவுக்கு வந்தார். ஏனெனில், எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படத்தின் பெயர் ‘அதிரூப அமராவதி’. 1956-ம் ஆண்டு எம்.ஜி.ஆர், பானுமதி நடிப்பில் உருவான படம் தான் ‘அதிரூப அமராவதி’. ஆனால், சில காட்சிகள் எடுக்கப்பட்டு அத்துடன் கைவிடப்பட்ட படங்களில் ‘அதிரூப அமராவதி’யும் சேர்ந்து விட்டது.

எம்.ஜி.ஆரின் துவக்க காலம் மட்டுமின்றி அவர் முதலமைச்சராக பதவியேற்கும் வரை நடித்து வெளிவராத படங்கள், பூஜை போட்டு நின்று போன படங்கள் நிறைய உள்ளன. சில படங்கள் கதை மாற்றப்பட்டு வேறு நடிகர்கள் நடித்து வெளியானது. அப்படி ஒரு படம் ‘ராஜா வீட்டுப் பிள்ளை’. ‘ஆசைமுகம்’ படத்தின் தயாரிப்பாளர் பி.எல்.மோகன்ராம் எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த அடுத்த படம் ‘இன்பநிலா’. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்படவும் அத்துடன் ‘இன்பநிலா’ படம் நின்று போனது. இதனால் கதையை மாற்றி ஜெய்சங்கரை வைத்து படத்தை எடுங்கள் என்று எம்.ஜி.ஆர். கூறியதால் ‘ராஜா வீட்டுப் பிள்ளை’ என்று மாறியது.

வெளிவராத படங்கள்
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக முதன் முறையாக நடித்த ‘சாயா’ படம் எடுத்தும் திரைக்கு வராமல் போனது என்பது மிகப்பெரிய சோகம். அதே போல ‘சிலம்புக்குகை’, ‘சிரிக்கும் சிலை’, ‘மலைநாட்டு இளவரசன்’, ‘குமாரதேவன்’, ‘ஊமையன் கோட்டை’, ‘வாழப் பிறந்தவன்’, ‘பவானி’, ‘ஏழைக்கு காவலன்’, ‘அட்வகேட் அமரன்’, ‘காணிநிலம்’, ‘கேள்வி பதில்’, ‘நடிகன் குரல்’, ‘தாய்வீடு’, ‘நாடோடியின் மகன்’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்கள் வரவில்லை.

‘கேரள கன்னி’, ‘பரமபிதா’,‘மகன் மகள்’, ‘வேலுத்தேவன்’, ‘வெள்ளிக்கிழமை’, ‘தந்தையும் மகனும்’, ‘கங்கையில் இருந்து கிரெம்ளின் வரை’, ‘இணைந்த கைகள்’, ‘யேசுநாதர்’, ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’, ‘மக்கள் என் பக்கம்’, ‘சமூகமே நான் உனக்குச் சொந்தம்’, ‘தியாகத்தின் வெற்றி’, ‘நானும் ஒரு தொழிலாளி’, ‘அமைதி’,‘புரட்சிப்பித்தன்’, ‘அக்கரைப் பச்சை’, ‘கேப்டன் ராஜா’, ‘நல்லதை நாடு கேட்கும்’, ‘இளைய தலைமுறை’, ‘இதுதான் பதில்’, ‘உன்னை விட மாட்டேன்’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்கள் அறிவிக்கப்பட்டு வெளிவராமல் போனவை.

1976-ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான ‘அண்ணா நீ என் தெய்வம்’ படம் பாதியில் நின்று போனது. இப்படத்தின் சில காட்சிகளை, தான் இயக்கிய ‘அவசர போலீஸ் 100’ படத்தில் இயக்குநர் கே.பாக்யராஜ் பயன்படுத்திக் கொண்டார். எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டிய ‘காத்தவராயன்‘, ‘மாடிவீட்டு ஏழை‘,‘இது சத்தியம்’, ‘அன்று சிந்திய ரத்தம்’. ‘அணையா விளக்கு’ உள்ளிட்ட சில படங்கள் வெவ்வேறு நடிகர்கள் நடித்து வெளியாயின.

ஆச்சரியம் அளித்த படம்
இதில் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் என்றவென்றால், 1956-ம் ஆண்டு ‘அதிரூப அமராவதி’ படத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பதற்கு முன்பே அதே பெயரில் ஒரு படம் 1935-ம் ஆண்டு வெளியானது என்பது தான்.‘காரைக்கால் அம்மையார்’, ‘ஆரவல்லி சூரவல்லி’ ஆகிய படங்களை இயக்கிய சி.வி.ராமன் தான் ‘அதிரூப அமராவதி’ படத்தையும் இயக்கியுள்ளார்.

அமராவதி என்ற இளவரசியை காதலிக்கும் இளவரசன் அதிரூபனின் கதை தான் படம். சாகச காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் டி.என்.சிவகொழுந்து, டி. எஸ்.வேலாம்பாள், கே.ரங்கநாயகி, பி.எஸ்.கிருஷ்ணவேணி, பி.எம்.சுந்தரபாஷ்யம், கே.கே. தங்கவேலு பிள்ளை, பி.ஆர்.சுவாமிநாதன், வி.எம்.ஏழுமலை உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை கோயம்புத்தூரைச் சேர்ந்த சுந்தரம் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்தது.

இந்த படத்தில் இடம் பெற்ற 45 பாடல்களையும் எஸ்.எஸ்.சங்கரலிங்க கவிராயர் எழுதியுள்ளார். அவரே இப்படத்திற்கு இசையமைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ரங்கசாமி நாயக்கர் தலைமையிலான குழு ஹார்மோனியம், சாரங்கி, தபேலா வாசித்துள்ளது. வணிக ரீதியாக வெற்றி பெற்ற இந்த படத்தின் தலைப்பை தனது படத்திற்கு எம்.ஜி.ஆர் ஏன் சூட்டினார் என்பது கேள்வி குடைந்தது.

நான் என்பது நீ அல்லவோ?
1941-ம் ஆண்டு கே.எஸ்.மணி இயக்கத்தில் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடிப்பில் வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்‘ என்ற திரைப்படம், அதே பெயரில் 1955-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது. அதே போல வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ‘அதிரூப அமராவதி’ படத்தை உருவாக்க எம்.ஜி.ஆர் நினைத்திருப்பாரோ என்ற மண்டை குடைச்சலுக்கு மத்தியில் தொலைக்காட்சியில் சேனலை மாற்றினேன். ‘நான் என்பது நீ அல்லவோ’ என்று அதி வீரபாண்டியன் என்ற கமல்ஹாசன், மைதிலியுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார்.
– ப.கவிதா குமார் ( தொடரும்)

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *